உலகம்

இலங்கை ஆளுங்கட்சி நிர்வாகியுடன் இந்தியத் தூதர் ஆலோசனை

இலங்கையில் ஆளும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவை அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தினமணி செய்திச் சேவை

இலங்கையில் ஆளும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவை அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இம்மாதத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தில்வின் சில்வாவும் சந்தோஷ் ஜாவும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவை இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா சந்தித்து இருதரப்பு நட்புறவில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான பொருளாதார உறவுகள் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கையின் பட்டாரமுல்லா நகரில் உள்ள பெலவட்டே பகுதியில் நடைபெற்றது. இலங்கையில் மலையகப் பகுதியில் இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்ட நடப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக "ஸ்ரீலங்கா மிரர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியா அளித்துவரும் உதவிகளுக்காக தில்வின் சில்வா நன்றி தெரிவித்ததாகவும், இலங்கைக்கு மேலும் உதவிகள் அளிக்கப்படும் என்று தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்ததாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்திய முதலீடு மற்றும் உதவி குறித்தும் விவசாயம், தகவல் தொழில்நுட்பம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூர்யா பதவியேற்ற பிறகு இந்தியாவில் மேற்கொள்ள உள்ள முதல் சுற்றுப்பயணம் இதுவாகும்.

இது தொடர்பாக ஹரிணி அமரசூர்யா வெளியிட்டுள்ள விடியோ பதிவில் "இந்தியாவும் இலங்கையும் வரலாறு, கலாசாரம் ஆகியவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. நமது உறவு ஆழமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். எனது இந்தியப் பயணத்தை பயன்படுத்திக் கொண்டு வர்த்தகம், முதலீடு, கல்வி, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: விஜய் தாமதமே காரணம் - பேரவையில் முதல்வர் பேச்சு!

தில்லியில் 4 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி!

கல்பகனூரில் களை கட்டிய ஆட்டுச் சந்தை!

சைபர் பாதுகாப்பு குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி-பதில்கள்!

டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

SCROLL FOR NEXT