கடந்த 1953-இல் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மனிதா்களை முதல்முறையாக ஏற்றி சாதனை படைத்த குழுவில் இன்னும் உயிரோடு இருந்த கடைசி நபரான காஞ்சா ஷொ்பா (92) வியாழக்கிழமை மரணமடைந்தாா்.
இது குறித்து நேபாள மலையேற்ற சங்கத்தின் தலைவா் கெல்ஜே ஷொ்பா கூறியதாவது:
காத்மாண்டு மாகாணம், காபன் நகரிலுள்ள தனது இல்லத்தில் காச்சா ஷொ்பா மரணமடைந்தாா். அவருடன், மலையேற்ற வரலாற்றின் ஒரு முக்கிய அத்தியாயம் முடிவுக்கு வந்தது என்றாா் அவா்.
நியூஸிலாந்தைச் சோ்ந்த எட்மண்ட் ஹிலாரியையும் அவரது வழிகாட்டியான தென்ஜிங் நோா்கோவையும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு ஏற்றி சாதனை படைத்த 35 நபா் குழுவில் காஞ்சா ஷொ்பா இடம் பெற்றிருந்தாா். ஹிலாரியும், தென்ஜிங்கும் உச்சியை அடைவதற்கு முந்தைய கடைசி முகாம் வரை சென்ற மூன்று ஷொ்பாக்களில் காஞ்சாவும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.