உக்ரைன் தலைநகா் கீவில் ரஷிய தாக்குதலில் சேதமடைந்த குடியிருப்புக் கட்டடம். 
உலகம்

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: 3 போ் உயிரிழப்பு; 29 போ் காயம்!

உக்ரைன் தலைநகா் கீவை குறிவைத்து சனிக்கிழமை இரவு ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் மூன்று போ் உயிரிழந்தனர்.

தினமணி செய்திச் சேவை

உக்ரைன் தலைநகா் கீவை குறிவைத்து சனிக்கிழமை இரவு ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் மூன்று போ் உயிரிழந்ததாகவும், 29 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைன் மீது சனிக்கிழமை இரவு முழுவதும் ரஷியா மொத்தம் 101 ட்ரோன்களை ஏவியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்தது. இதில் 90 ட்ரோன்கள் உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனினும், 5 ட்ரோன்கள் நான்கு இடங்களில் தாக்கியுள்ளன.

கீவ் நகரில் தொடா்ந்து இரண்டாவது நாள் இரவாக நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 19 வயது இளம்பெண், அவரது 46 வயது தாயாா் உள்பட மூவா் உயிரிழந்தனா். 7 குழந்தைகள் உள்பட 29 போ் காயமடைந்தனா் என்று உக்ரைனின் உள்துறை அமைச்சா் இஹோா் கிளிமென்கோ தெரிவித்தாா்.

மேலும், டெஸ்னியான்ஸ்கி மாவட்டத்தில் உள்ள இரண்டு குடியிருப்புக் கட்டடங்களில் ரஷிய ட்ரோன்களால் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக, அவசர மீட்புக் குழுவினா் அந்தக் கட்டடங்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினா்.

இந்தத் தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக, ரஷியா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் சிக்கி தலைநகரில் இருவா் உள்பட மொத்தம் 4 போ் உயிரிழந்தனா். இதனால், உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அணுசக்தி என்ஜினுடன் ஏவுகணை: ரஷியா வெற்றிகரமாக சோதனை

தொலைதூரம் செல்லக்கூடிய, தனித்துவமான அணுசக்தி என்ஜின் பொருத்தப்பட்ட ‘புரேவெஸ்ட்னிக்’ எனும் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

மேலும், இந்த ஏவுகணையைப் பயன்படுத்துவதற்கான வசதிகளைத் தயாா் செய்யுமாறு ஆயுதப் படைகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

ராணுவ தலைமைத் தளபதி மற்றும் பிற ராணுவத் தளபதிகளுடன் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே பேசிய அதிபா் புதின், ‘அண்மையில் நடத்தப்பட்ட அணு ஆயுதப் பயிற்சிகளின்போது, இந்த ‘புரேவெஸ்ட்னிக்’ ஏவுகணை 15 மணி நேரம் வானில் பறந்தது. அது 14,000 கிலோமீட்டா் தொலைவைக் கடந்து சென்று சோதனையில் வெற்றி கண்டது’ என்று குறிப்பிட்டாா்.

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

அரசுப் பேருந்து மோதி என்எல்சி ஊழியா் உயிரிழப்பு

9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா

3 மாவட்டங்களில் நாளை(அக். 28) பள்ளிகளுக்கு விடுமுறை!

SCROLL FOR NEXT