தாய்லாந்து ராணித் தாய்(குயின் மதர்) என்று போற்றப்படும் முன்னாள் ராணி சிரிகிட்(Sirikit) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை(அக். 25) காலமானார். அவருக்கு வயது 93.
தாய்லாந்தில் ஏழை மக்களுக்கு அவர் ஆற்றிய பொதுச்சேசைக்காகவும் தாய்லாந்தின் கலாசாரத்தை உலக அரங்கில் முன்னிலைப்படுத்த அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவும் தாய்லாந்தின் கருணை மற்றும் பெருமையின் அடையாளமாக ராணி சிரிகிட் மக்களால் கொண்டாடப்படுபவர். அன்னாரது பிறந்த நாளான ஆகஸ்ட் 12 தாய்லாந்தில் அன்னையர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
குயின் மதர் சிரிகிட் மறைவுக்கு ஐ.நா. பொதுச்செயலர் உள்பட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ராணி சிரிகிட் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்திருப்பதாகவும், பொதுச்சேவைக்கான அன்னாரது வாழ்நாள் அர்ப்பணிப்பு பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் இத்தருணத்தில் அவரை இழந்து வாடும் ராணியின் குடும்பத்துக்கும், அரசருக்கும், தாய்லாந்து மக்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும்’ அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குயின் மதர் சிரிகிட் மறைவைத் தொடர்ந்து, ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்ட தாய்லாந்து பிரதமர் அனுட்டின் சார்ன்விரகுல் தமது பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குயின் மதர் சிரிகிட் உடல் சுலாலாங்கார்ன் மருத்துவமனையிலிருந்து அரசு மரியாதையுடன் எடுத்துச்செல்லப்பட்டு பாங்காக்கில் உள்ள அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பெருந்திரளாகச் சென்று ராணி சிரிகிட்டுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.