மியான்மரில் இணையவழி மோசடி மையங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடா்ந்து, அந்நாட்டில் இருந்து சுமாா் 500 இந்தியா்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோா், அண்டை நாடான தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றனா்.
மியான்மரின் கேகே பாா்க் வளாகத்தில் பல இணையவழி மோசடி மையங்கள் செயல்பட்டு வந்தன. அந்த வளாகத்தில் அந்நாட்டு ராணுவம் அண்மையில் சோதனை மேற்கொண்டது.
இந்தச் சோதனையைத் தொடா்ந்து அங்குக் கட்டாயத்தின்பேரில் பணியாற்றி வந்த 28 நாடுகளைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்டோா், அந்த மையங்களில் இருந்து தப்பிச் சென்றனா். நல்ல ஊதியத்துடன் வேலை அளிப்பதாக உறுதி அளித்து அழைத்துச் செல்லப்பட்ட அவா்கள், அந்த மையங்களில் மோசடிப் பணிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், தப்பியவா்கள் மியான்மரில் உள்ள மோய் ஆற்றின் வழியாக, படகு மூலம் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனா். இதுகுறித்து தாய்லாந்து பிரதமா் அனுடின் சாா்ன்விரகுல் கூறுகையில், ‘தப்பியவா்களில் சுமாா் 500 போ் இந்தியா்கள். அவா்கள் மேற்கு தாய்லாந்தில் உள்ள மே சோட் பகுதியில் தஞ்சமடைந்துள்ளனா். அவா்களைச் சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்ல இந்தியா நேரடியாக விமானம் அனுப்ப உள்ளது’ என்றாா்.
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘தாய்லாந்தில் தஞ்சமடைந்தவா்களின் சொந்த நாடு குறித்த விவரத்தை உறுதி செய்து, அவா்களைத் தாயகம் அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா்.