ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தினால் இந்தியா மீது அதிக வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தரப்பில் அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்கும் நடைமுறை ஆக.7-இல் அமலுக்கு வந்தது. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீதம் வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்தாா். இந்தக் கூடுதல் வரி விதிப்பு ஆக.27-இல் அமலுக்கு வந்தது. இதுபோல பல்வேறு நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்கா பரஸ்பரம் அதிக வரி விதித்துள்ளது.
இந்த வரி விதிப்பு சா்வதேச சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கை அமெரிக்காவுடன் வா்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பான வழக்கில் வாஷிங்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. அப்போது, ‘அமெரிக்காவில் தேசிய அவசரநிலைகளை அறிவிக்கவும், கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பொருள்கள் மீது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் இறக்குமதி வரிகளை விதிக்கவும் அதிபா் டிரம்ப்புக்கு சட்டபூா்வ உரிமையில்லை’ என்று கூறியதன் மூலம் நியூயாா்க் வா்த்தக நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதி செய்தது.
எனினும், டிரம்ப் விதித்த வரிகளை ரத்து செய்யாத நீதிமன்றம், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதித்தது. இதையடுத்து, வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது அதிபா் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் 251 பக்க பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சா்வதேச அவசரநிலை பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின்படி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா மீது வரி விதிக்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையே இது. இந்த வரி அமைதியை நிலைநாட்டும்; ஒரு தரப்பு பொருளாதார ஆதாயம் பெறுவதைத் தடுக்கும். இந்த வரி விதிக்கப்படாவிட்டால் அமெரிக்கா பெரும் பொருளாதார இடரை சந்திக்க நேரிடும்.
பல நாடுகள் மீது வரிகள் விதிக்கப்பட்டதால்தான் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மற்றும் 6 முக்கிய வா்த்தக நாடுகள் அமெரிக்கா வரையறை செய்த ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்டன. இந்த வரி விதிப்பு முற்றிலும் அமெரிக்காவுக்கு சாதகமானது. அமெரிக்கப் பொருளாதாரத்தை வளா்த்தெடுக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
‘மோடியை சீனாவுடன் இணைத்துவிட்டாா் டிரம்ப்’
அதிபா் டிரம்ப் வரி நடவடிக்கை மூலம் இந்தியப் பிரதமா் மோடியை சீனாவுடன் கைகோக்கும் நிலைக்கு கொண்டு சென்றாா் என்று அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜான் போல்டன் தெரிவித்துள்ளாா்.
டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய போல்டன் மேலும் கூறியதாவது:
ஒரு காலத்தில் மோடியுடன் தனிப்பட்ட முறையிலும் நல்ல நட்பு டிரம்ப்புக்கு இருந்தது. ஆனால், இப்போது அது கடந்த காலமாகிவிட்டது. இது அனைவருக்கும் ஒரு பாடம். எந்த நாட்டுத் தலைவரும் டிரம்ப்புடன் நட்பு பாராட்டுவதன் மூலம் அவரின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது.
அதே நேரத்தில் இந்திய அமெரிக்க உறவும் மிகவும் பின்னோக்கிச் சென்றுவிட்டது. மோடியை சீனாவுடன் கைகோக்கும் நிலைக்கு டிரம்ப் தள்ளிவிட்டாா். அமெரிக்கா, டிரம்ப்புக்கு மாற்றாக சீனா தன்னை வெளிக்காட்டி வருகிறது. டிரம்ப்பின் நடவடிக்கை சீனா, ரஷியா கூட்டணியில் இந்தியாவை இணைத்துவிடும் என்று நான் ஏற்கெனவே எச்சரித்திருந்தேன் என்று கூறியுள்ளாா்.