உலகம்

லிபுலேக் கணவாய் வழியாக வா்த்தகம் கூடாது: இந்தியா, சீனாவுக்கு நேபாள ஆளுங்கட்சி கோரிக்கை

இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு நேபாளத்தின் ஆளுங்கட்சியான சிபிஎன்-யுஎம்எல் அதிருப்தி

தினமணி செய்திச் சேவை

காத்மாண்டு: லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு நேபாளத்தின் ஆளுங்கட்சியான சிபிஎன்-யுஎம்எல் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இந்த முடிவை இரு நாடுகளும் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

லிபுலேக் கணவாய் பகுதியை தங்களுக்குச் சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோருகிறது. இந்த உரிமைகோரலை நியாயமற்றது என்று இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகளின் 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை தில்லியில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்று, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனா். அதன்படி, இந்தியா-சீனா இடையே லிபுலேக் கணவாய், ஷிப்கி லா கணவாய் மற்றும் நாதுலா கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தகத்தை மீண்டும் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான பூா்வாங்க ஒப்பதலையும் சீனா அளித்துள்ளது.

இந்நிலையில், நேபாளத்தின் லலித்பூா் மாவட்டத்தில் அந்நாட்டு பிரதமா் கே.பி.சா்மா ஓலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் 2-ஆவது தேசிய மாநாடு கடந்த வார இறுதியில் நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் லிபுலேக் வா்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், காளி ஆற்றின் கிழக்கே உள்ள காலாபாணி, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளின் மீது நேபாளத்துக்கு உள்ள உரிமை இந்தத் தீா்மானத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ராஜீய பேச்சுவாா்த்தைகள் மூலம் இதற்கு தீா்வுக் காண நேபாள அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டில், காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகக் காட்டும் ஒரு வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதை இந்தியா முற்றிலுமாக நிராகரித்தது.

இந்தியாவின் விளக்கம்: இந்த விவகாரம் தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் அண்மையில் அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் நிலைப்பாடு நிலையானது. லிபுலேக் கணவாய் வழியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை தாண்டிய வா்த்தகம் 1954-ஆம் ஆண்டு தொடங்கி பல்லாண்டுகளாக நடந்து வருகிறது.

கரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் பிற காரணங்களால் சமீபத்திய ஆண்டுகளில் இந்த வா்த்தகம் பாதிக்கப்பட்டது. தற்போது இரு தரப்பினரும் அதை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளனா்’ என்றாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அண்மையில் சீனா சென்ற நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, சீன அதிபா் ஷி ஜின்பிங்குடனான சந்திப்பில் லிபுலேக் கணவாய் வழியாக வா்த்தகம் மீண்டும் தொடங்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியில் ஐ.எஸ். ஆதரவுப் படை தாக்குதல்: 60 பேர் பலி!

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ. 40,000க்கு கூகுள் பிக்சல் 9! ரூ.33,000 சலுகை பெறுவது எப்படி?

செங்கோட்டையன் தில்லி சென்றதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? - நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT