போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிராா்த்தித்த அனைவருக்கும் மனமாா்ந்த நன்றி தெரிவித்தாா்.
பாரம்பரிய பிற்பகல் ஆசீா்வாதத்தின்போது செயிண்ட் பீட்டா் சதுக்கத்தில் உரையாற்றிய போப் லியோவை பிறந்த நாள் வாழ்த்து பதாகைகள், பலூன்கள் மற்றும் ஆரவாரங்களுடன் மக்கள் வரவேற்றனா்.
அப்போது பேசிய அவா், ‘என் அன்பா்களே, இன்று எனக்கு 70 வயதாகிறது என்பது உங்களுக்குத் தெரியும். கா்த்தருக்கும், என் பெற்றோருக்கும், தங்கள் பிராா்த்தனைகளில் என்னை நினைவுகூா்ந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்தாா்.
பின்னா், ஒற்றுமை மற்றும் நினைவுகூா்தலுக்கான தனது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், 21-ஆம் நூற்றாண்டின் தியாகிகளை கௌரவிக்கும் பிராா்த்தனைக்கு போப் லியோ தலைமை வகித்தாா்.
கடந்த மே மாதம் 69 வயதில் போப்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட போப் லியோ இரண்டாவது இளைய போப் ஆவாா். முன்னதாக 1978-ஆம் ஆண்டில் தனது 58 வயதில் இரண்டாம் ஜான் பால் போப்பாக தோ்வு செய்யப்பட்டாா்.