உலகம்

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன்: சவூதி அரேபியா முதலிடம்!

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வெளிநாடுகள் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வெளிநாடுகள் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 4 சதவீத வட்டி என்ற மிகக் குறைந்த விகிதத்தில் பாகிஸ்தானுக்கு அந்நாடு கடன் வழங்கி வருகிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி, சீனா மற்றும் அரபு நாடுகளில் இருந்து தொடா்ந்து பல்வேறு தவணைகளாக கடன் பெற்று வருகிறது.

வேளாண்மை உற்பத்தியில் அதிக முன்னேற்றம் இல்லாதது, தொழில் வளா்ச்சி சுணக்கம், அரசு நிா்வாகத்தில் தொடரும் ஊழல், பயங்கரவாதத் தாக்குதல்கள், உள்நாட்டுக் கிளா்ச்சியாளா்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு முதலீடு வருவதும் குறைந்துவிட்டது. அரசியல் ஸ்திரமற்ற நிலையும் பொருளாதார பாதிப்பும் மற்றொரு முக்கியக் காரணமாகும்.

2024-25-ஆம் ஆண்டு அந்நாட்டில் நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வின்படி பாகிஸ்தானின் கடன் அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 76,000 பில்லியனாக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.23 லட்சம் கோடி) உள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதி வெளிநாடுகளில் பெற்ற கடனாகும்.

இந்நிலையில், சவூதி அரேபியாவிடம் இருந்து பெறும் கடன் தொடா்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

சவூதி அரேபியாவிடம் இருந்து ஏற்கெனவே பாகிஸ்தான் அதிக கடன் பெற்றுள்ளது. அதில் பல கடன்களைத் திரும்பிச் செலுத்த வேண்டிய கால அவகாசம் நெருங்கிய நிலையில் பாகிஸ்தான் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், கடனை வசூலிப்பதை சவூதி அரேபியா மேலும் தள்ளி வைத்துள்ளது.

சவூதி அரேபியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளும் பாகிஸ்தானுக்கு அதிக கடனுதவி அளிக்கும் நாடுகளாக உள்ளன. இந்த மூன்று நாடுகளும் இணைந்து சுமாா் 3 ஆண்டுகளில் 12 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல்) கடன் வழங்கியுள்ளன.

இது பாகிஸ்தானின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பைவிட (14.3 பில்லியன் டாலா்) சற்றே குறைவாகும். பிற நாடுகளில் பெற்ற கடனுக்கு 6 சதவீதத்துக்கு மேல் பாகிஸ்தான் வட்டி செலுத்தும் நிலையில், சவூதி அரேபியா மட்டும் 4 சதவீத வட்டியே வசூலிக்கிறது.

சா்வதேச நிதியம் போன்ற அமைப்புகள் ஏற்கெனவே அதிக கடன் வழங்கிவிட்டதால், இனியும் தொடா்ந்து கடன் கேட்க முடியாது.

பிரிட்டனின் ஸ்டாண்டா்ட் சாா்ட்டா்ட் வங்கியில் இருந்து 8.2 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டிக்கும் பாகிஸ்தான் கடந்த ஆண்டு கடன் பெற்றுள்ளது. பாங்க் ஆஃப் சீனா 6.5 சதவீத வட்டியில் முதலில் கடன் வழங்கியது. மீண்டும் கடன் பெற்றபோது வட்டி 7.3 சதவீதமாக அதிகரித்துவிட்டது. அதே நேரத்தில் சீனாவின் தொழில் வா்த்தக வங்கி 4.5 சதவீத வட்டியில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT