பாகிஸ்தான் பிரதமர் உள்பட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டங்களுக்கு இடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் உள்பட குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சு நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரி கரோலின் லியாவிட் நேற்று (செப். 22) கூறுகையில், கத்தார், சௌதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன், அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பேசுவார் என அறிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், காஸா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ராஜதந்திர, அரசியல் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப், அதிபர் டிரம்ப் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், ஐ.நா. பொதுச்செயலாளர், உக்ரைன், ஆர்ஜென்டீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களை மட்டுமே அதிபர் டிரம்ப் சந்திப்பார் என வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா! - ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் மார்கோ ரூபியோ பேச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.