ஐக்கிய அரபு அமீரகத்தால் வழங்கப்படும் சுற்றுலா மற்றும் பணி விசாக்களை 9 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், 2026 விசா கொள்கையின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
9 நாடுகள் எவை?
ஆப்கானிஸ்தான், லிபியா, யேமன், சோமாலி, லெபனான், வங்கதேசம், கேமரூனியன், சூடான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு மறுஅறிவிப்பு வரும் வரை புதிதாக யாருக்கும் சுற்றுலா அல்லது பணி விசாக்கள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, விசா வைத்திருக்கும் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது, அவர்கள் தற்போதைய விசாவின் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் தங்கி, பணிபுரியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பாதிப்பா?
தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லாததால், தொடர்ந்து பணி மற்றும் சுற்றுலா விசாவுக்கு இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம்.
9 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கான விசா இடைநிறுத்தம் குறித்து அதிகாரப்பூர்வ காரணத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு வெளியிடவில்லை.
பயங்கரவாதம், தூதரக ரீதியிலான பதற்றங்கள், தொற்றுநோய் பரவல் குறித்த உளவுத்துறை அறிவுறுத்தல் பேரில் தடை விதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், சில நாடுகளில் இருந்து உளவு பார்க்கும் அச்சுறுத்தல்கள் இருப்பதால், குடியேற்றச் சட்டங்களை ஐக்கிய அரபு அமீரக அரசு கடுமையாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
சர்வதேச பணியாளர்கள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை ஊக்குவிக்கும் அதே சமயத்தில் தேசிய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு 2026 விசா கொள்கை உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாவில் பின்னடைவை ஏற்படுமா?
இந்த தடை ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றாலும், பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருப்பவர்களுக்கு இது பொருந்தும். பட்டியலில் உள்ள 9 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மறுஅறிவிப்பு வரும் வரை பயணிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.
இந்த நடவடிக்கை ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை அதிகம் பாதிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பணி நிமித்தமாகவும், வணிக காரணங்களுக்காகவும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்வோர் இடையே பாதிப்பை ஏற்படுத்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.