போர் முடிந்த பிறகு பதவி விலகுவேன்; மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: ஸெலென்ஸ்கி
அதிபர் பதவியில் இருந்து விலகுவது குறித்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கருத்து..
ரஷியாவுடனான போர் முடிவுக்கு வந்தபிறகு அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவதாகவும் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கடந்த 2019ல் உக்ரைன் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 2024 பிப்ரவரியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ரஷியாவுடனான போர் நீடிப்பதால் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுதொடர்பாக பேசிய ஸெலென்ஸ்கி,
Advertisement
Advertisement
"ரஷியாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே முதல் இலக்கு. போர் முடிவுக்கு வந்த பிறகு நான் அதிபர் பதவியில் இருந்து விலகி விடுவேன். அதன்பிறகு மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். ஏனெனில் தேர்தல் என்பது என்னுடைய இலக்கு அல்ல. மக்களுடன் துணை நிற்பதே என்னுடைய குறிக்கோள்.
போர் காலத்தில் உக்ரைன் மக்களுக்கு துணையாக நிற்க விரும்புகிறேன். போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு உக்ரைனில் தேர்தலை நடத்த கோருவேன். அப்போது தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
பதவிக்காலம் முடிந்தும் அதிபர் பதவியில் ஸெலென்ஸ்கி நீடிப்பதாக ரஷியா பேசி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், 'போருக்காக அமெரிக்காவிடமிருந்து சக்திமிக்க ஆயுதங்களை கோரியுள்ளோம். ரஷியா போரை நிறுத்தவில்லை என்றால் கிரெம்பிளினில் பணிபுரியும் ரஷிய அதிகாரிகள், தங்கள் அலுவலகத்துக்கு அருகில் பாதுகாப்பு இடம் எங்கே இருக்கிறது என தேட வேண்டி வரும்" என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், 'இதைவிட பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். பாதுகாப்பு இடங்களில்கூட தங்க முடியாது. இதனை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
President of Ukrain Volodymyr Zelenskyy Says Ready To Leave Presidency After Peace
இதையும் படிக்க | இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.