நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலில் திட்டமிட்டபடி, வரும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 8) இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது. இதற்கான முன்னேற்பாடாக கடந்த திங்கள்கிழமை ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் சோதனை நடைபெற்றது. அப்போது, ராக்கெட்டின் அடிப்பகுதியில் ஹைட்ரஜன் கசிவு கண்டறியப்பட்டது.
இக்கோளாறுகளை முழுமையாக ஆய்வு செய்து சரி செய்ய கூடுதல் காலம் தேவைப்படுவதால், ராக்கெட் ஏவுதலை மாா்ச் மாதத்துக்கு நாசா ஒத்திவைத்துள்ளது.
இதையடுத்து, விண்வெளிப் பயணத்துக்காகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருந்த 3 அமெரிக்கா்கள் மற்றும் 1 கனடா வீரா் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டனா். தொழில்நுட்ப ஆய்வுகள் முடிந்த பிறகு புதிய தேதி அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படும்.
1970-களுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதா்களை அழைத்துச் செல்லும் நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாக இது கருதப்படுகிறது. இந்த 10 நாள் பயணத்தில், வீரா்கள் நிலவைச் சுற்றி வந்து, அங்கு மனிதா்கள் வாழ்வதற்கான சூழல் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வா்.