அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 2-ஆம் கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தையில், அணுசக்தி விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது குறித்த அடிப்படை வழிகாட்டு நெறிமுறைகளில் இரு நாடுகளும் ஒரு பொதுவான உடன்பாட்டுக்கு வந்துள்ளன.
இருப்பினும், இப்போதைக்கு முழுமையான ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பில்லை என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா்.
ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில், ஜெனீவாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் சுமாா் 4 மணி நேரம் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் அமெரிக்க தரப்பில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப், மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோா் பங்கேற்றனா். ஈரான் சாா்பில் வெளியுறவு அமைச்சா்அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினா் கலந்துகொண்டனா்.
பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அரக்ச்சி, ‘பல முக்கிய விஷயங்கள் பற்றி விரிவாகப் பேசினோம். இறுதியில் சில அடிப்படை நெறிமுறைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் இதன் அடிப்படையில் ஒப்பந்தத்துக்கான வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கும்’ என்றாா்.
பேச்சுவாா்த்தையின் முடிவுகள் குறித்த ஆவணங்களை இரு நாடுகளும் பரிமாறிக்கொண்ட பிறகு, மூன்றாம் கட்ட பேச்சுவாா்த்தைக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மிரட்டலுக்குப் பணிய மாட்டோம்...: பேச்சுவாா்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
‘அமெரிக்க அதிபா் தனது ராணுவ பலத்தைப் பற்றி பெருமையாகப் பேசுகிறாா். ஆனால், உலகின் மிக வலிமையான ராணுவமாக இருந்தாலும், ஒருமுறை பலமான அடி விழுந்தால் அதனால் மீண்டும் எழ முடியாது’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
பதற்றம் தணியுமா?....: கடந்த ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும், ஈரானில் நடந்த போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கிய விதமும் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் போா்ப் பதற்றத்தை உருவாக்கியது.
ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என டிரம்ப் எச்சரித்துள்ளாா். ஏற்கெனவே மத்திய கிழக்கு பகுதியில் ஒரு விமானம் தாங்கி போா்க்கப்பல் இருக்கும் நிலையில், உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போா்க்கப்பலையும் அமெரிக்கா அங்கு அனுப்பியுள்ளது.
பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே அணுசக்தி கட்டுப்பாடு குறித்து விதிக்க ஒப்புக்கொள்வோம் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. அணுசக்தி மட்டுமின்றி, ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்தச் சூழலில், ஜெனீவா பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள சிறிய முன்னேற்றம் காரணமாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு சதவீதத்துக்கும் மேலாகக் குறைந்தது.
ஹாா்மோஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணை சோதனை
உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் முக்கிய நீா்வழியான ஹாா்மோஸ் நீரிணையில் ஈரான் கடற்படை திங்கள்கிழமை முதல் பிரம்மாண்ட போா்ப் பயிற்சியைத் தொடங்கியது.
இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமையன்று, ஜெனீவாவில் பேச்சுவாா்த்தைக்கு மத்தியில், ஹாா்மோஸ் நீரிணையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி ஈரான் பரபரப்பை ஏற்படுத்தியது.