கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா வியூகம்: மத்திய கிழக்கு பகுதியில் புதிதாக 3 போர்க் கப்பல்கள், 2,500 வீரர்கள் நிறுத்தம்!
ஈரானின் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது குறித்து...
ஈரானின் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதற்காக புதிதாக 3 போர்க்கப்பல்கள், 2,500 கடற்படை வீரர்கள் மத்திய கிழக்கு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் சேர்ந்து நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவரும் மதகுருவுமான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதன்பின்னர், வளைகுடா நாடுகள் மீது ஈரானும், ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேஸ் மாறி மாறி தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன. தந்தையின் படுகொலைப் பிறகு பதவியேற்ற உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி, ஈரானியர்களின் மனவுறுதியைப் பாராட்டினார். மேலும், எதிரிகளின் தாக்குதல்களை ஆட்சியை கவிழ்ப்பதற்கான பயனற்ற முயற்சிகள் என்று நிராகரித்தார்.
23 ஆவது நாளாக நீடித்து வரும் இந்த போரில், ஈரானின் ராணுவ தளங்கள், அணுசக்தி தளங்கள், எண்ணெய் வயல்கள் என 8,000-க்கும் மேற்பட்ட இடங்களை அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தரைமட்டமாக்கி உள்ளன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 20 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் வயல்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலமும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஈரானின் நடான்ஸ் நகரில் உள்ள அணு சக்தி தளத்தின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் அணு சக்தி தளம் கடுமையாக சேதமடைந்தது. இருப்பினும் அங்கு அணு கதிர் வீச்சு ஏற்படவில்லை என்று ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், ஈரான் கடற்கரையில் இருந்து 26 கி.மீ. தொலைவில் கார்க் தீவு அமைந்துள்ளது. ஈரான் முழுவதும் இருந்து குழாய்கள் மூலம் இந்த தீவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் 90% கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி வாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கருதப்படும் கார்க் தீவை கைப்பற்ற அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கெனவே 16 போர்க்கப்பல்கள் முகாமிட்டு உள்ள நிலையில் யுஎஸ்எஸ் ட்ரிபொலி, யுஎஸ்எஸ் சான் டியாகோ, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் ஆகிய 3 அமெரிக்க போர்க்கப்பல்களையும், 2500 கடற்படை வீரர்களையும் நிறுத்தியுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் பெயர் குறிப்பிடாமல் உறுதிப்படுத்தினர். இந்தக் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளன. இதில் உள்ள வீரர்கள் கடல், வான், தரை வழி போரில் திறன் வாய்ந்தவர்கள்.
உயிரிழப்புகள் அதிகரிப்பு
ஈரானில் 1,300-க்கும் மேற்பட்டோரும், லெபனானில் 1,000-க்கும் மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலின் தகவல்படி 500-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டனர்; இஸ்ரேலில் 15 பேர், மேற்குக் கரையில் 4 பேர், 13 அமெரிக்கப் படையினர் பலியாகியுள்ளனர்.
ஈரானின் ஹோர்முஸ் நீரிணை முற்றுகை மற்றும் வளைகுடா எரிசக்தித் துறை மீதான தாக்குதல்கள், கச்சா எண்ணெய் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய்க்கு 108 டாலராக (போருக்கு முன் 70 டாலராக இருந்தது) உயர்த்தியுள்ளன. இது எண்ணெய், ஹீலியம், கந்தகம் மற்றும் உரங்களின் உலகளாவிய விநியோகத்தைப் பாதித்ததுடன், உலகளாவிய உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.
ஈரானின் தலைமை நிலையற்றதாகவும், சேதங்கள் தெளிவாகத் தெரியாத நிலையிலும், எந்தவொரு கிளர்ச்சியோ அல்லது முடிவோ விரைவில் தென்படுவதாகத் தெரியவில்லை. இதில் ஈரானுக்கு எதிராக உதவாத நேட்டோ கூட்டாளிகளை,"கோழைகள்" என்றும் "காகிதப் புலி" என்றும் டிரம்ப் கடுமையாகச் சாடினார்.
430 கிலோ யுரேனியம்
ஈரானின் நடான்ஸ், போர்டோ அணுசக்தி தளங்களில் சுமார் 430 கிலோ யுரேனியம் இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த தளங்களில் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
90 சதவீதம் அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும். செறிவூட்டப்பட்ட 42 கிலோ யுரேனியம் மூலம் ஓர் அணு குண்டை தயாரிக்கலாம். அதன்படி 10 அணு குண்டு தயாரிக்கலாம். இதனை தடுக்க ஈரானின் அணுசக்தி தளங்களை அழித்து, அந்த 430 கிலோ யுரேனியத்தை பறிமுதல் செய்ய அமெரிக்காவும் இஸ்ரேலும் வியூகம் வகுத்துள்ளன.
Nearly three weeks into the war-sparked on February 28-the US deployed three warships, including the USS Boxer, and 2,500 Marines to the Middle East
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.