Yuki Iwamura
உலகம்

நியூ யார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி பதவியேற்பு! குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்!

நியூ யார்க் மேயராக ஸோரான் மம்தானி பதவியேற்றது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மம்தானி பதவியேற்பு: நியூ யார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்காவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஜனநயாகக் கட்சி சார்பில் நியூயார்க் நகர மேயர் பதவிக்குப் போட்டியிட்ட 34 வயதான ஸோரான் மம்தானி வெற்றிபெற்றார்.

அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் எழுச்சி நாயகனாக வலம்வரும் மம்தானி, நியூ யார்க் மேயராகப் பதவியேற்கும் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

புத்தாண்டு நாளான இன்று அதிகாலை (அமெரிக்க நேரப்படி), நியூயார்க்கில் கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புடைய பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் மேயராகப் பதவியேற்றார்.

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளார்.

அப்போது பேசிய மம்தானி, ”நியூ யார்க் நகரின் மேயராகப் பதவியேற்பது வாழ்நாள் மரியாதையாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.

ஹமாஸ் ஆதரவாளராகவும், கம்யூனிச சித்தாந்தங்களை பின்பற்றுபவராகவும் அறியப்படும் மம்தானிக்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த மம்தானி?

உகாண்டாவின் கம்பாலாவில் 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் ஸோரான் மம்தானி. சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய மீரா நாயரின் மகன் இவர். தந்தை கல்வியாளர் மஹ்மூத் மம்தானி.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் குழந்தைப் பருவத்தை கழித்த ஸோரான், 7-வது வயதில் நியூ யார்க் நகருக்குப் பெற்றோர்களுடன் குடிபெயர்ந்தார்.

போடோயின் கல்லூரியின் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும்போதே ஸோரானின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாலஸ்தீன நீதிக்கான மாணவர்கள் என்ற அமைப்பை நிறுவினார்.

அஸ்டோரியா மற்றும் லாங் தீவு உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய 36-வது மாவட்டத்தின் பிரதிநிதியாக நியூ யார்க் மாகாண அவைக்கு 2019 ஆம் ஆண்டு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிரியா நாட்டின் கலைஞர் ராமா துவாஜி என்பவரை இந்தாண்டு தொடக்கத்தில் ஸோரான் திருமணம் செய்துகொண்டார்.

மலிவு விலை வீடுகள், பொது போக்குவரத்து மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் ஆகியவை தொடர்பாக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நியூ யார்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் தனது முற்போக்கு கருத்துகளால் ஸோரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸோரான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும்நிலையில், மேயர் தேர்தலில் ஸோரான் வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்தி விடுவதாக டிரம்ப் எச்சரித்திருந்தார்.

Indian-origin Mamdani sworn in as New York Mayor: oath on the Quran!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

புல்லட் ரயிலுக்கு இப்போதே டிக்கெட் எடுக்கலாம்! அஸ்வினி வைஷ்ணவ்

புத்தாண்டு: சற்றே சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!

கடைசி ஆஷஸ் டெஸ்ட் : ஸ்மித் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸி. அணி!

புத்தாண்டிலும் அப்டேட் இல்லையா? வருந்தும் சூர்யா ரசிகர்கள்!

SCROLL FOR NEXT