நியூ யார்க் மேயர் அதிகாரம்: நியூ யார்க் நகரத்தின் புதிய மேயராக இன்று பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மாற்று சக்தியாக உருவெடுக்கக் கூடிய அரசியல் தலைவராகத் திகழ்கிறார்.
அமெரிக்காவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று நியூயார்க் நகர மேயராக 34 வயதான ஸோரான் மம்தானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல் மேயர்..!
அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் எழுச்சி நாயகனாக வலம்வரும் மம்தானி, நியூ யார்க் மேயராகப் பதவியேற்கும் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
புத்தாண்டு நாளான இன்று அதிகாலை (அமெரிக்க நேரப்படி), நியூயார்க்கில் கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புடைய பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் மேயராகப் பதவியேற்றார்.
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளார்.
டிரம்ப் - மம்தானி மோதல்
நியூயார்க் தேர்தல் பிரசாரத்தின் போது, மம்தானி ஒரு கம்யூனிஸ்ட் மற்றும் ஹமாஸ் ஆதரவாளர் என்று குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், நியூயார்க் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரசாரம் மேற்கொண்டார்.
மேலும், மம்தானியை “கம்யூனிச பைத்தியக்காரர்” என்று மிக காட்டமாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த மம்தானியிடம், ”நீங்கள் அதிபர் டிரம்ப் ஒரு ஃபாசிஸ்ட் என உறுதியாக நம்புகிறீர்களா?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, டிரம்ப் முன்னிலையில் ”ஆம்” என்று அவர் பதிலளித்தார்.
மம்தானியின் அதிகாரம் என்ன?
அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க நகரமான நியூ யார்க்கின் கட்டுப்பாடு தற்போது மம்தானியிடம் வசமுள்ளது. நகரத்தின் உட்கட்டமைப்பு முதல் காவல்துறை வரை அவரின் அதிகார வரம்புக்கு கீழ் உள்ளது.
இதுமட்டுமின்றி சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பு நியூ யார்க் மேயரிடம் இருக்கிறது.
மேலும், நியூ யார்க் நகரில் வசிக்கும் 90 லட்சம் மக்களுக்கான கொள்கைகளை வகுக்கும் பொறுப்பும் மம்தானியிடம் உள்ளது.
நியூயார்க் நகர சாசனத்தின் கீழ், மேயர் நகரத்தின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றுவார். அவரது அதிகாரங்களானது ஒரு சிறிய நாட்டு அரசாங்கத் தலைவரின் அதிகாரங்களுக்கு நிகரானவை ஆகும்.
என்னவெல்லாம் செய்ய முடியும்?
காவல்துறை, வீட்டுவசதி, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி உள்பட நகரின் 40-க்கும் மேற்பட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்கவும், நீக்கவும் முடியும்.
பெரும்பாலான அமெரிக்க மாகாணங்களின் வரவு-செலவுத் திட்டத்தை விட அதிகமாக இருக்கும் நியூ யார்க் நகரின் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து, அதனை நிர்வகிக்க முடியும்.
நகர சபையால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியும், புதிய மசோதாக்களை சபையின் ஆதரவுடன் நிறைவேற்ற முடியும்.
மாகாண அரசின் தலையீடு இல்லாமல், நகர நிறுவனங்களை மறுசீரமைக்கவோ அல்லது இணைக்கவோ முடியும். நிதி மற்றும் கவனத்தை மாற்றியமைக்க முடியும்.
மாகாண மற்றும் மத்திய அரசுகளுடன் நியூ யார்க் நகரமானது எவ்வாறு உறவுகளை நிர்வகிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.
இந்த அதிகாரங்கள் மேயருக்கு நகர்ப்புற வாழ்க்கையை வடிவமைக்க, சமூகக் கொள்கை முதல் பொருளாதார திட்டமிடல் வரை சுதந்திரத்தை வழங்குகின்றன.
டிரம்ப்புக்கு தலைவலியா?
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடும் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூ யார்க் நகர அளவிலான மம்தானியால் மாற்றத்தை கொண்டு வரமுடியும்.
உதாரணமாக, சமூக நலத் திட்டம் ஒன்றை டிரம்ப் ரத்து செய்தால், அதற்கு மாற்றுக்கொள்கை வடிவமைத்து உள்ளூர் அளவில் விரிவுபடுத்த அந்த நலத்திட்டத்தை மம்தானியால் செயல்படுத்த முடியும்.
டிரம்ப் அரசின் உத்தரவுகளுக்கு எதிராக நகரத்தின் சட்டத் துறையை திரட்டி, நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடரலாம்.
மத்திய அரசின் மானியங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க நகர வரவு செலவுத் திட்டங்களை அவர் சரிசெய்ய முடியும், இதன் மூலம் டிரம்ப்பின் செல்வாக்கைக் குறைக்கலாம்.
வாஷிங்டனை எதிர்பார்க்காமல், உலகளாவிய காலநிலை கூட்டணிகள், வணிகக் கூட்டணிகள் போன்றவற்றில் சர்வதேச விவகாரங்களுக்கான மேயர் அலுவலகம் மூலம் மம்தானி நேரடியாக ஈடுபட முடியும்.
நகர மன்றம் Vs வெள்ளை மாளிகை
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டமானது மத்திய அரசுக்கு எதிராக நகராட்சிகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினாலும், நியூ யார்க் மேயர் பதவியானது இதற்கு விதிவிலக்காக இருக்கிறது.
சுயாட்சி மற்றும் பொதுமக்களிடையே உள்ள செல்வாக்கு ஆகியவை நியூ யார்க் மேயரைத் தனித்துவமான அரசியல் சக்தியாக ஆக்குகின்றன.
உள்ளூர் அதிகாரத்தை தேசிய அளவிலான செல்வாக்குச் சக்தியாக மாற்றுவதே மம்தானிக்கு சவாலாக இருக்கின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.