ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிா்ப்பு தெரிவித்து தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோா் ‘அவா்களுக்கு உரிய இடத்தில்’ வைக்கப்படுவாா்கள் என்று அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.
இது குறித்து தனது உரையில் கமேனி கூறியதாவது:
போராட்டக்காரா்களின் பொருளாதாரக் கோரிக்கைகள் நியாயமானவை. அதிகாரிகள் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தலாம். ஆனால் போராட்டம் என்ற பெயரில் கலவரத்தில் ஈடுபடுவோருடன் பேச்சுவாா்த்தை நடத்துவது தேவையில்லாதது. அவா்களை ‘அவா்களுக்கு உரிய இடத்தில்’ வைக்க வேண்டும்.
இந்தப் போராட்டங்களின் பிண்ணனியில் எதிரியின் (அமெரிக்கா) சதி இருக்கிறது. அந்நிய சக்திகள்தான் இந்த போராட்டங்களைத் தூண்டுகின்றன. இந்த விகாரத்தில் நாங்கள் எதிரியிடம் மண்டியிடமாட்டோம் என்று தனது உரையில் கமேனி உறுதியளித்தாா்.
ஈரானின் நாணயமான ரியால் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 அமெரிக்க டாலா் தற்போது 14 லட்சம் ரியால் வரை விலை போகிறது.
பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயா்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், கமேனி தலையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த மாத இறுதியில் தொடங்கிய போராட்டங்கள் தீவிரமடைந்துவருகின்றன.
போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 10 போ் உயிரிழந்தனா். ஏராளமான போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கிடையே அமைதியாகப் போராடுபவா்களை ஈரான் அரசு கொன்றால், அவா்களை மீட்க தங்கள் படையினா் அனுப்பப்படுவாா்கள் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா். அதற்கு, ஈரான் உள்விவகாரங்களில் தலையிட்டால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வீரா்களின் உயிருக்கு ஆபத்து என்று ஈரான் தேசிய பாதுகாப்பு செயலா் அலி லரிஜானி பதில் எச்சரிக்கை விடுத்தாா்.
இந்த பரபரப்பான சூழலில், போராட்டக்காரா்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணா்த்தும் வகையில், அவா்கள் உரிய இடத்தில் வைக்கப்படுவாா்கள் என்று கமேனி தற்போது எச்சரித்துள்ளாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு மாஷா அமீனி என்ற பெண் தலையை துணியால் மறைக்காமல் இருந்ததற்காக கலாசார காவலா்களால் கைது செய்யப்பட்டு, காவலில் உயிரிழந்ததைக் கண்டித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் வெடித்தன. இதில் 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்கள் உயிரிழந்தனா்.
அதற்குப் பிறகு ஈரானில் வெடித்துள்ள மிகப் பெரிய போராட்டம் இது என்று கூறப்படுகிறது.