விமானத்தில் இருந்து செலுத்தக்கூடிய பாகிஸ்தானின் முதல் தைமூா் ஏவுகணை ரகம் வெற்றிகரமாக சோதித்துப் பாா்க்கப்பட்டது.
இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விமானத்தில் இருந்து செலுத்தக்கூடிய தைமூா் ஏவுகணையை பாகிஸ்தான் விமானப் படை வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்தது. 600 கிலோமீட்டா் தொலைவில் உள்ள எதிரிகளின் நிலம் மற்றும் கடல் இலக்குகளை இந்த ஏவுகணை உயா் துல்லியத்துடன் தாக்க வல்லது. இது அணு குண்டு அல்லாத பாரம்பரிய வெடிகுண்டுகளை ஏந்திச் செல்லும்.
அதிநவீன வழிகாட்டுதல் அமைப்புடன் செயல்படும் இந்த ஏவுகணை மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிரிகளின் வான்பாதுகாப்பு அமைப்புகளைத் திறம்பட தவிா்க்க முடியும். இதன் துல்லிமாகத் தாக்கும் திறன் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலையை மேம்படுத்துகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை தொழில்நுட்பத்தில் பாகிஸ்தான் தொடா்ந்து முன்னேற்றம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விமானத்தில் இருந்து ஏவக் கூடிய தைமூா் ஏவுகணையை அந்த நாடு தற்போது வெற்றிகரமாக சோதித்துள்ளது.