புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில், 2026 அடுத்த ஆண்டு என்று கூகுளின் செய்யறிவு அளித்த பதில் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
செய்யறிவு சரியாக சொல்லும் என்று இதுவரை மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், செய்யறிவு உருவாக்கி வரும் நிறுவனர்கள் என்னவோ பல முறை செய்யறிவு சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம், அதன் பதில் துல்லியமாக இருக்காது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். மக்கள் யாரும் கேட்பதாக இல்லை. இன்று அது நேரடியாகவே வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
கூகுளில், ஒரு பயனர் அடுத்த ஆண்டு 2027 தானே? என்று கேள்வி எழுப்ப, கூகுளின் செய்யறிவோ, கொஞ்சமும் அறிவில்லாமல் இல்லை, இல்லை. 2026-தான் அடுத்த ஆண்டு. அது வியாழக்கிழமை பிறக்கிறது. 2027, வரும் ஆண்டுக்கு அடுத்த ஆண்டு என்று பதிலளித்துள்ளது.
பயனரோ, 2026-ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இப்போது நடப்பது 2026ஆம் ஆண்டு, வரப்போவது 2027ஆம் ஆண்டு என்று அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
இந்த ஸ்கிரீன்ஷாட்டை பயனர் சமூக வலைத்தளத்தில் பகிர, இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் கருத்திட்டதால் உலகளவில் ஒரே நாளில் வைரலானது இந்த தகவல்.
ஏற்கனவே, எக்ஸ் தளத்தின் குரோக் செய்யறிவு, குழந்தைகள் மற்றும் பெண்களின் மோசமான படங்களை வெளியிட்டு மக்களின் அதிருப்திகளை பெற்றிருந்த நிலையில் தற்போது கூகுள் செய்யறிவு விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
கூகுள் செய்யறிவு விமர்சிக்கப்படுவது இது ஒன்றும் முதல்முறையல்ல. ஏற்கனவே, க்ளூவை பிட்சாவில் சேர்த்து சாப்பிடலாம், உடலுக்கு வைட்டமின்கள் கிடைக்க வேண்டும் என்றால் பாறைகளை சாப்பிடலாம் என கூகுள் வழிகாட்டி சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.
அது மட்டுமல்லாமல், உடல் நலம் தொடர்பாக மோசமான குறிப்புகளை செய்யறிவுகள் வழங்கி வருவதாகவும், அதனை மக்கள் அப்படியே நம்ப வேண்டாம் என்றும் ஊடகங்கள் எச்சரித்து வருகின்றன.
முதலில், மருத்துவ அறிக்கைகளை செய்யறிவிடம் கொடுத்து அதன் கருத்துகளை அறிவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்றும், தவறான தகவல்களால் தேவையற்ற அச்ச உணர்வை அடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செய்யறிவு பெரும்பாலும் இணையதளத்தில் வெளியிடப்படும் செய்திகளை வைத்தே தகவல்களை பதிவிடுவதால், தவறான தகவல்களும் வெளியாகும் அபாயம் இருப்பதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.