ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது. ஈரானில் மோசமடைந்துள்ள பொருளாதார நிலைமையைக் கண்டித்து நாடெங்கிலும் தீவிரமடைந்துள்ள போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. 2-ஆவது வாரத்தை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,400-ஐ கடந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
பதற்றமான சூழலைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள இந்தியா்கள் அங்கிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக வெளியேற வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களுக்காக சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை(ஜன. 16) இயக்கப்படுகிறது. முதல்கட்டமாக ஈரானிலுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர கடும் சவாலுக்கு மத்தியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெஹ்ரானிலுள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானில் மாணவர்கள் உள்பட சுமார் 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரானில் இணையதளம் முடக்கம் உள்பட தொலைத்தொடர்பு வசதிகள் நிறுத்தப்பட்டிருப்பதால் இந்தியர்களைத் தொடர்புகொண்டு தாயகம் அழைத்து வருவதற்கான பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.