வங்கதேசத்தில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் ஹிந்து தொழிலதிபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்க தேசத்தின் காசிப்பூரில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் இந்து தொழிலதிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்குத் தொடர்பு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலில் பலியானவர் ஹோட்டல் உரிமையாளரான 55 வயது லிடன் சந்திர கோஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஸ்வபன் மியா(55), அவரது மனைவி மஜீதா கதுன் (45) மற்றும் அவர்களது 28 வயது மகன் மசும் மியா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காளிகஞ்ச் காவல் நிலைய அதிகாரி ஜாகிர் ஹொசைன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மசும் மியாவுக்குச் சொந்தமான வாழைப்பழத் தோட்டத்தில் இருந்து ஒரு கொத்து வாழைப்பழங்கள் காணாமல் போனதாக புகார் அளித்திருந்தார். அதைத் தேடிச் சென்றபோது, லிடனின் ஹோட்டலில் அந்த வாழைப்பழங்களைக் கண்டுள்ளார்.
இதுதொடர்பாக மசும் மியாவுக்கும் ஹோட்டலில் பணிபுரியும் அனந்த தாஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்னையை தீர்க்க ஹோட்டல் உரிமையாளர் லிடன் தலையிட்டபோது, அவர் தாக்கப்பட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் லிடனை குத்தியும் உதைத்தும் தாக்கியுள்ளனர். இதில் லிடன் தரையில் விழுந்து பலியானார்.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர். இருப்பினும், இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக சமீபகாலமாக நடைபெற்று வரும் வன்முறையுடன் தொடர்புடையதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.