அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!
ஈரான் போர் எதிரொலி: ஐக்கிய அரபு அமீரகத்தில் மக்கள் தேவையின்றி வெளியேற வேண்டாம்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரான் போர் எதிரொலியாக அமீரகத்தில் மக்கள் தேவையின்றி வெளியேற வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் போரில் உச்சகட்ட பதற்றமாக, இஸ்ரேல் - அமெரிக்க படையின் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி (86) கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி அளிக்கும் என்று சூளுரைத்துள்ளது.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே இப்போது பூதாகரமாகப் போா் வெடித்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளிலும் அமெரிக்க முகாம்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் இயன்றளவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படவும் பெரும்பாலான பணியாளர்களை தங்கள் வசிப்பிடங்களிலிருந்தபடியே வொர்க் ஃப்ரம் ஹோம் (டபில்யூ.எஃப்.எச்) முறையில் பணியாற்றிட அறிவுறுத்திடவும் அரசு நிர்வாகம் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.