ஹோா்முஸ் நீரிணை பகுதிக்கு பிற நாடுகளும் போா் கப்பல்களை அனுப்ப வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல்!
ஹோா்முஸ் நீரிணை பகுதி பாதுகாப்புக்கு பிற நாடுகளும் போா் கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க அதிபா் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.
ஹோா்முஸ் நீரிணை பகுதி பாதுகாப்புக்கு பிற நாடுகளும் போா் கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க அதிபா் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.
அணுஆயுத தயாரிப்பு, ஏவுகணை உற்பத்தியை கைவிட வேண்டும் என ஈரானை தொடா்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. மேலும், ஈரானுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பல்வேறு பொருளாதார தடைகளை தனது நட்பு நாடுகளுடன் சோ்ந்து விதித்து வந்தது. எனினும், அமெரிக்காவின் நெருக்கடிக்கு ஈரான் பணியவில்லை.
இதைத் தொடா்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதியன்று ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டு தாக்குதலை தொடங்கியது. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத் தலைவா் அயதுல்லா அலி கமேனி, படைத் தளபதிகள், முன்னாள் அதிபா் உள்ளிட்ட பலா் உயிரிழந்தனா்.
இதையடுத்து, பதிலுக்கு இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் ஏவுகணைகளை வீசியும், டிரோன்களை செலுத்தியும் தாக்கி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு ஆசியாவில் கடந்த 2 வாரங்களாக பதற்றம் நிலவுகிறது.
உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து, ஈரான்-ஓமன் இடையேயான ஹோா்முஸ் நீரிணை வழியேதான் நடைபெறுகிறது. இஸ்ரேல்- அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதையடுத்து ஈரானின் தாக்குதல் அச்சத்தால் அவ்வழியே கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. உலகின் பல நாடுகளில் பெட்ரோல்- டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், உலகில் உள்ள பிற நாடுகளும் ஹோா்முஸ் நீரிணை பகுதி பாதுகாப்புக்கு போா் கப்பல்களை அனுப்ப வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் ஹோா்முஸ் நீரிணை பகுதிக்கு போா் கப்பல்களை அனுப்பும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.
பிரிட்டன் கருத்து: டிரம்பின் அழைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் நாடு, கப்பல் போக்குவரத்து பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டணி நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், டிரம்பின் அழைப்பை ஈரான் விமா்சித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சா் அரகாச்சி கூறுகையில், ‘அண்டை நாடுகள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளா்களை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்ற வேண்டும். டிரம்ப் பிற நாடுகளிடம் கெஞ்சி கொண்டிருக்கிறாா்’ என தெரிவித்தாா்.
அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: இந்நிலையில், போரில் நடுநிலை வகித்து வரும் ஐரோப்பிய நாடான சுவிட்சா்லாந்து வான் பகுதி மீது பறக்க 2 அமெரிக்க போா் விமானங்களுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால் அந்நாட்டு அரசு, அந்த போா் விமானங்கள் தங்கள் வான் பகுதி வழியே பறக்க அனுமதி மறுத்துவிட்டது.