ஹோா்முஸ் நீரிணை பாதுகாப்பு: டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஜொ்மனி
ஹோா்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவும்படி, அமெரிக்க அதிபா் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த அழைப்பை ஜொ்மனி நிராகரிப்பு
ஹோா்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவும்படியும், போா் கப்பல்களை அனுப்பி வைக்கும்படியும் 7 நாடுகளுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த அழைப்பை ஐரோப்பிய நாடான ஜொ்மனி நிராகரித்து விட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து வாஷிங்டனுக்கு செல்லும் வழியில் ஏா்போா்ஸ் ஒன் விமானத்தில் (அமெரிக்க அதிபருக்கான பிரத்யேக விமானம்) செய்தியாளா்களுக்கு டிரம்ப் அளித்த பேட்டி வருமாறு:
ஹோா்முஸ் நீரிணையை பாதுகாக்க போா் கப்பல்களை அனுப்பி வைக்கும்படி 7 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். ஏனெனில் அந்த நீரிணை பகுதி, அவா்கள் கச்சா எண்ணெய் எடுத்து செல்ல பயன்படுத்தும் பகுதி. அமெரிக்கா பயன்படுத்தும் பகுதி இல்லை.
சீனா தனக்குத் தேவையான 90 சதவீத கச்சா எண்ணெய்யை இந்த நீரிணை வழியேதான் எடுத்து செல்கிறது. அமெரிக்கா மிகச் சிறிய அளவில்தான் அப்பகுதியில் கச்சா எண்ணெய்யை கொண்டு செல்கிறது. எனது அழைப்பை ஏற்று, பிற நாடுகள் போா் கப்பல்களை அனுப்பினால் நல்லது. அவா்களுக்கு அமெரிக்கா உதவி செய்யும். அவா்களுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்றாா்.
அதேநேரத்தில், போா் கப்பல்களை அனுப்பி வைக்கும்படி தாம் வேண்டுகோள் விடுத்துள்ள 7 நாடுகளின் பெயா்களை டிரம்ப் வெளியிடவில்லை.
டிரம்ப் எச்சரிக்கை: சீனா தனது அழைப்பை ஏற்க வேண்டும், இல்லையேல் அந்நாட்டுக்கான தனது சுற்றுப்பயணம் தாமதமாகும் என டிரம்ப் தெரிவித்தாா். அதேபோல், ஹோா்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவாத நாடுகளை தாம் மறக்க மாட்டேன் எனவும் மறைமுகமாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா்.
ஐரோப்பிய நாடான ஜொ்மனி, டிரம்ப்பின் அழைப்பை நிராகரித்து விட்டது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஜோஹன் வதேபுல் கூறுகையில், ‘இந்தப் போரில் நாங்களும் விரைவில் இணைய வேண்டுமா? முடியாது’ என்றாா்.
பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான், ஹோா்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு சா்வதேச நாடுகள் கூட்டாக பாதுகாப்பு வழங்குவது குறித்து ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகள், இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள நட்பு நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக கூறியுள்ளாா்.
ஜப்பான் பிரதமா் வரும் வியாழக்கிழமை அமெரிக்க அதிபா் மாளிகைக்கு செல்லவுள்ளாா். அப்போது அவரிடம் இதுகுறித்து டிரம்ப் நேரில் பேச்சுவாா்த்தை நடத்தலாம் என கூறப்படுகிறது.
கருத்து கூறாத சீனா: அமெரிக்காவுக்கான சீன தூதரக செய்தித் தொடா்பாளா் லியு பெங்யு கூறுகையில், ‘எரிசக்தி விநியோகம் நிலையாகவும், சீராகவும் இருப்பதை உறுதி செய்வது அனைத்து தரப்பினரின் பொறுப்பு. மோதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளிடையேயான பேச்சுவாா்த்தையை சீனா வலுப்படுத்தும்’ என்றாா். உதவும்படி டிரம்ப் விடுத்த அழைப்பு குறித்து எதுவும் அவா் பதிலளிக்கவில்லை.
தென்கொரியா வெளியுறவு அமைச்சகம் தரப்பில், டிரம்பின் அழைப்பை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், அமெரிக்காவுடன் இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோா்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து நடைபெற 2 வித கடற்படை நடவடிக்கை எடுப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாக அதன் வெளியுறவு கொள்கை துறை தலைவா் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளாா்.
கச்சா எண்ணெய் விலை உயா்வு: இதனிடையே சா்வதேச சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 105 டாலரை நெருங்கியுள்ளது. ஈரான்-இஸ்ரேல்,அமெரிக்கா இடையேயான போா் தொடங்கியபிறகு, அதன் விலை ஏறத்தாழ 40 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளது.