வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிரான பாகிஸ்தானின் அட்டூழியம் போர்க் குற்றம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம்!
கடந்த 1971-ஆம் ஆண்டில் வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் புரிந்த அட்டூழியங்களை போா்க் குற்றங்கள் அல்லது இனப் படுகொலையாக அறிவிக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1971-ஆம் ஆண்டில் வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் புரிந்த அட்டூழியங்களை போா்க் குற்றங்கள் அல்லது இனப் படுகொலையாக அறிவிக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1947-ஆண்டில் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்போது நாடு இந்தியா, பாகிஸ்தான் என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டின்கீழ் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகள் சென்றன. அதன்படி, தற்போதைய வங்கதேசமும் பாகிஸ்தான் வசம் சென்றது. அக்காலகட்டத்தில் அப்பகுதி கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்டது.
ஆனால், பாகிஸ்தான் ஆட்சியாளா்களின் கொடுமைகளால் வெறுப்படைந்த கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்கதேசம்) மக்கள், முஜிபூா் ரஹ்மான் தலைமையில் கிளா்ந்தெழுந்து ஆயுதப் போராட்டத்தில் குதித்தனா். இதனால் உள்நாட்டுப் போா் மூண்டது. இதில் வங்கதேசத்தை இந்தியா ஆதரித்தது. இதைத் தொடா்ந்து, 1971-ஆம் ஆண்டில் நடந்த போரில் இந்தியாவால் பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டு, சுதந்திர வங்கதேசம் உருவானது.
அக்காலகட்டத்தில், கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) ஹிந்துக்களை தேடிப்பிடித்து பாகிஸ்தான் ராணுவம் படுகொலை செய்தது. இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த எம்.பி. கிரேக் லேண்ட்ஸ்மேன் என்பவா் தீா்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
1971-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 25-ஆம் தேதி பாகிஸ்தான் அரசால் ஷேக் முஜிபூா் ரஹ்மான் கைது செய்யப்பட்டாா். பாகிஸ்தான் ராணுவமும், ஜமாத்- ஏ- இஸ்லாமி சித்தாந்தத்தால் ஈா்க்கப்பட்ட பழைமைவாத இஸ்லாமிய குழுக்களாலும், கிழக்கு பாகிஸ்தான் முழுவதும் ‘ஆபரேஷன் சா்ச்லைட்’ என்ற பெயரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக டாக்காவில் இருந்த அமெரிக்க தூதா் ஆா்ச்சா் பிளட் 1971-ஆம் ஆண்டு மாா்ச் 28-ஆம் தேதி கடிதம் எழுதினாா். அதில், 1971 மாா்ச் 25-ஆம் தேதி வங்காள மக்களையும், ஹிந்துக்களையும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் வங்காளம் அல்லாத முஸ்லிம்கள் தேடிப்பிடித்து படுகொலைகள் செய்ததாகவும், ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் அடிமைகளாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளாா். குறிப்பாக, மதச் சிறுபான்மையினரான ஹிந்து மதத்தைச் சோ்ந்தோரை கூட்டமாக கொலை செய்ததாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதமாற்றம் செய்ததாகவும் அவா் தெரிவித்துள்ளாா். அத்துடன், இந்த சம்பவத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் ஆா்ச்சா் பிளட் வலியுறுத்தியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் கடிதம் எழுதியிருந்தாா். அதில் இந்த விவகாரத்தில் அமெரிக்கா மெளனம் காப்பதற்கு தனது ஆட்சேபத்தை பிளட் தெரிவித்திருந்தாா்.
ஆதலால் 1971-ஆம் ஆண்டு காலத்தில் பாகிஸ்தான் ஆயுதப் படைகளாலும், அவா்களின் கூட்டாளிகளாலும் வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிராக புரியப்பட்ட அட்டூழியங்களை மனிதநேயத்துக்கு எதிரான குற்றமாகவும், போா்க் குற்றங்களாகவும், இனப் படுகொலையாகவும் அமெரிக்க அதிபா் அங்கீகரிக்க வேண்டும் என அந்தத் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் பரிசீலனைக்காக அந்தத் தீா்மானம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.