மனித உரிமை செயல்பாட்டாளர்களை மண்டியிடச் செய்த இஸ்ரேல் அமைச்சர்: வலுக்கும் கண்டனம்!
இஸ்ரேலில் மனித உரிமை மீறல்! அமைச்சருக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!
ரோம் : இஸ்ரேல் அரசில் அமைச்சர் பதவி வகிக்கும் இடாமர் பென்-விர்ரின் மோசமான நடத்தை கண்டனத்தைப் பெற்று வருகிறது. இஸ்ரேல் தேச பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் இடாமர் பென்-விர்ரின் பாலஸ்தீன ஆதரவு செயல்பாட்டாளர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலஸ்தீன ஆதரவு செயல்பாட்டாளர் குழு காஸாவுக்கான நிவாரணப் பொருள்களுடன் சென்ற படகை சிப்ரஸ் அருகே வழிமறித்த இஸ்ரேலிய கடற்படையினர் அவர்கள் அனைவரையும் ஆஷ்தோத் துறைமுகத்தில் சிறை வைத்தனர். இந்நிலையில், அங்கு சென்ற அமைச்சர் இடாமர் பென்-விர், மண்டியிட்டு நிறுத்தப்பட்டிருந்த அவர்களைப் பார்த்து வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் பேசி செயல்பட்டார். இது தொடர்பான காட்சிகள் கொண்ட காணொலியை அவர் இணையத்திலும் பகிர்ந்துள்ளார்.
இஸ்ரேலில் வலதுசாரியைச் சேர்ந்த அமைச்சரின் இந்தச் செயலை அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு, வெளியுறவு அமைச்சர் ஆகியோரும் விமர்சித்துள்ளனர். இஸ்ரேலின் மாண்புகளைக் கடைப்பிடிக்கும் விதத்தில் அவர்கள் இல்லை என்று குறிப்பிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் நெதன்யாகு.
Advertisement
Advertisement
சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, மேற்குறிப்பிட்ட இரு நாடுகளும் தங்கள் நாடுகளுக்கான இஸ்ரேலிய தூதரை நேரில் அழைத்து இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச மனித உரிமைகள் நிறுவனமும் இஸ்ரேல் அமைச்சருக்கு எதிராக கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருப்பதுடன் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.