/

தாயைப் போல பிள்ளை! ஆனால்... பாலன் தி பாய் திரை விமர்சனம்!

இயக்குநர் சிதம்பரம் இயக்கிய பாலன் தி பாய் படத்தின் விமர்சனம்...

News image

பாலன் தி பாய்

Updated On :20 ஜூன் 2026, 12:22 pm IST

பாலன் தி பாய் திரை விமர்சனம்

3/5

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான பாலன் தி பாய் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் ஆரம்பக் காட்சியே சிறைச்சாலையில் தன் ஆறுவயது அளவுள்ள மகனுடன் கதை நாயகியான ஃபர்ஹானாவுக்கு விடுதலை கிடைத்து சிறையிலிருந்து வெளியே வருகிறார். அம்மாவும் மகனும் யார்? இவர்களின் சொந்தம் யார்? எதுவும் காட்டப்படுவதில்லை. ஆனால், அடுத்தடுத்தக் காட்சிகளில் எங்கு சென்றாலும் தங்களுக்குப் புதுபெயர் இட்டு, அடையாளங்களை மறைத்து வாழ்கிறார்கள். தேனீர் கடை, ரப்பர் எஸ்டேட், கட்டமானத் தொழில் என அம்மா ஒவ்வொரு இடத்திலிருந்து மாறி, மாறி மகனை அழைத்துக்கொண்டே செல்கிறார். ஒருநாள் இரவு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து அடையாள அட்டையைப் பார்க்கும் நாயகி, அதனை வைத்து வயதான பெண்மணியைப் பராமரிக்கும் வேலைக்குச் செல்கிறாள். படுக்கையிலிருக்கும் அம்மூத்த பெண்மணியைக் கவனிக்க ஆரம்பிக்கும்போது கதையின் தீவிரம் அதிகரிக்கிறது. உண்மையில், அம்மாவும் மகனும் எதற்காக தங்கள் அடையாளங்களை மறைக்க முயல்கின்றனர்? வயதான பெண் வீட்டிலும் பெரிய சிக்கலில் மாட்டும் சூழல் நாயகிக்கு அமைகிறது. அதிலிருந்து தாயும் மகனும் மீள்கிறார்களா? சஸ்பென்ஸ் தொடர்கிறது.

மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் மூலம் இந்தியளவில் கவனிக்கப்பட்ட இயக்குநர் சிதம்பரம் இப்படத்தை இயக்கியுள்ளார். படம் எப்படி எனப் பார்ப்பதற்கு முன் ஒரு இறுதி விளக்கமாக ஒன்றைச் சொல்லலாம். ”பொறுமையாக நகரும் உணர்வூப்பூர்வமான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை ரசிக்கக்கூடியவரா நீங்கள்? ஆமென்றால், இப்படத்தைத் தவற விடாதீர்கள்!”

அம்மாவும் மகனுமாக ஆரம்ப காட்சிகளிலேயே தங்களை அடையாளங்களை மறைத்து ஒவ்வொரு இடமாகச் செல்வது, அங்கு தங்களை யாராவது விசாரித்தாலோ இல்லை உரிமை கொண்டாடினாலோ அங்கிருந்து கிளம்புவது என, ஏன், எதற்கு என்கிற எந்த அழுத்தமான விஷயமும் சொல்லப்படமால் வெறுமனே அவர்கள் இருவரும் கிளம்புவதும், அடையாளத்தை மாற்றுவதுமாக இருப்பதால் முதல்பாதி முழுக்க இயல்பாகவே யார் இவர்கள்? என்கிற கேள்விக்கான சுவாரஸ்யம் எழுகிறது. கூடவே, திரில்லர் கதைகளுக்கே உண்டான மேக்கிங்கும் பின்னணி இசையும் இணைவது மெல்ல, மெல்ல கதைக்குள் அழைத்துச் செல்கிறது. நீண்ட வசங்களோ, விவரணைகளோ இல்லாததும் நல்ல எழுத்தாகவே இப்படத்திற்கு அமைந்திருக்கிறது.

இடைவேளைக் காட்சியும் கிளைமேக்ஸும் எழுதப்பட்ட விதமே இப்படத்திற்கான தாய் - மகன் எமோஷனலை இறுதியில் நன்றாகவும் கடத்துச் செய்திருக்கிறது. ஆனால், யார் இவர்கள் என்கிற கேள்விக்கான பதிலைக் கூறாமலே எழுதப்பட்டுள்ளது இக்கதைக்கு பலவீனம் என்றே தோன்றுகிறது. அவர்கள் யாரென்கிற ஆவல் இருந்த அளவிற்கு அதுகுறித்து நாயகி சொல்லும் கதை போதுமானதாகப்படவில்லை. காரணம், அம்மாவின் முடிவுகளாலேயே மகன் தேவையில்லாமல் அலைக்கழிப்பைச் சந்திக்கிறான். அப்படி யாருக்கும் தெரியாமல் வாழ்வதன் நோக்கம் ஏன் என்கிற கேள்வியும் அவ்வபோது எழுகிறது.

Listicle image

முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஃபர்ஹானா பழந்திங்கள், ஆதிசேஷன் ஆகியோர் மிகச்சிறப்பாக கதைக்கு ஒன்றியுள்ளனர். இப்படத்தின் நடிகர்கள் தேர்வாளரான கணபதி (இயக்குநர் சிதம்பரம் தம்பி) அட்டகாசமான நடிகர்களைக் கொண்டு வந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சிறுவனுக்கான கதாபாத்திரத்தில் 4000 பேரை ஆடிஷன் செய்து அதில் ஆதிஷேசனைத் தேர்வு செய்துள்ளார். மேலும், ஆதிஷேசனின் கண்களுக்கு ஏற்ப தாய் கதாபாத்திரத்திற்காக ஃபர்ஹானாவைத் தேர்வு செய்திருக்கிறார். படத்தில் அம்மா - மகன் கண்களே அச்சத்தையும் குழப்பத்தையும் கொடுக்கிறது. நல்ல நடிகர்களால் சாதாரண கதையைக் கூட சிறப்பாக்க முடியும் என்பதற்கு பாலனும் ஒரு உதாரணம்.

இயக்குநர் சிதம்பரம் மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தின் மூலம் கதையைத் தாண்டி தொழில்நுட்ப ரீதியாகவும் கவனிக்க வைத்தார். இப்படத்திலும், சில நல்ல மேகரா கோணங்கள், ஒலிக்கலவை ஆகியவற்றை வைத்தே சில காட்சிகளை மிரட்டலாக எடுத்துகிறார். குறிப்பாக, சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே அச்சத்தைக் கொடுக்கும் வயதான பெண் கதாபாத்திரத்திற்கான காட்சியமைப்புகள். அக்கதாபாத்திரத்தில் நடித்த டோலி பலரது கைதட்டல்களைப் பெறுகிறார். அப்படியொரு நடிப்பு! அப்படியொரு அறிமுகம்!

படத்திற்கான கதையை ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியிருக்கிறார். மிக மிக நம்பிக்கையான படைப்பாளியாகவே இக்கதை மூலம் ஜித்து மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் சிஷு காலித் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஃபர்ஹானாவுக்கு வைத்த க்ளோஸ் அஃப் காட்சிகளாகட்டும், மகனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு குழப்பங்களுடன் திரும்பும் வைட் (wide) ஷாட்டுகளாகட்டும் அனைத்தும் தனித்துவமாகத் தெரிகிறார். சிஷுவின் ஒளிப்பதிவுக்கு ஏற்ற எடிட்டிங்கும் கச்சிதமாக இருக்கிறது.

பாராட்டிச் சொல்ல இன்னொரு விஷயம் உண்டு. நடிகர் டொவினோ தாமஸ் இப்படத்தில் தொப்பை போட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது யார் வேண்டுமானாலும் நடிக்கக் கூடிய சாதாரண கதாபாத்திரம். ஆனால், மலையாள சினிமா நட்சத்திர நாயகனாக டொவினோ நடித்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. நட்சத்திர அந்தஸ்த்தை மலையாள சினிமா உடைத்துக்கொண்டே தொடர்ந்து ஒரு செய்தியைச் சொல்கிறது; கதைதான் சூப்பர்ஸ்டார்! மற்றது எல்லாம் அதற்குப் பிறகுதான் என்பதை அங்கு வலுவாக நம்புகின்றனர். (நம்மூர் சினிமாவில் ஒரு படம் ஹிட் கொடுத்தால், அடுத்த படத்தில் ஹீரோ காட்சிகளை மாற்றச் சொல்வார். இந்த சின்ன கதைக்கு நான் எதற்கு என்பார். இயக்குநர், தயாரிப்பாளர் கேட்க வேண்டும். அதனால்தான் நம்மால் ஆஸ்கர் வரைச் செல்லும் படங்களை எடுக்கவும் முடிகிறது!)

தாயைப் போல் பிள்ளை என்கிற கதையில் இவர்கள் சாதாரண தாயும் சாதாரண மகனும் இல்லை என வலுவாக நம்ப வைத்து, இறுதியில் அந்த உறவின் வலிமையை உணர்வுப்பூர்வமான மாற்றிக்காட்டியிருக்கிறார்கள். அம்மா - மகன் செண்டிமெண்ட் கதையாக இருந்தாலும் இதன் அமைதியான எழுத்திலுள்ள வலுவான உணர்வு அசைத்துப் பார்க்கிறது.

movie review of Balan the Boy, directed by Chidambaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.