அஸ்ஸாம் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு

DIN 9th May 2021 04:39 PM


அஸ்ஸாம் புதிய அமைச்சரவை நாளை (திங்கள்கிழமை) நண்பகல் 12 மணிக்கு பதவியேற்கவுள்ளது.

அஸ்ஸாம் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைக்கிறது. முதல்வரைத் தேர்வு செய்வதில் முன்னாள் முதல்வர் சர்வானந்த சோனோவால் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இதனிடையே, இன்று பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹிமந்த விஸ்வ சர்மா பெயரை முன்னாள் முதல்வர் சர்வானந்த சோனோவால் முன்மொழிந்தார். அதற்கு எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம் ஹிமந்த விஸ்வ சர்மா அஸ்ஸாம் முதல்வராகிறார்.

இந்த நிலையில் மாநிலத்தின் புதிய அமைச்சரவை நாளை நண்பகல் 12 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.