மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

நாகபுரி வன்முறை: முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு

நாகபுரியில் நிகழ்ந்த வன்முறையில் முக்கிய குற்றவாளியான ஃபாஹிம் கானின் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2025, 4:27 am IST

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஃபாஹிம் கானின் இரண்டு மாடி வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனா். உள்ளாட்சி நிா்வாகத்திடம் உரிய திட்ட அனுமதி பெறாமல் அந்த வீடு கட்டப்பட்டதால் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னா் ஔரங்கசீபின் கல்லறையை இடிக்கக் கோரி நாகபுரியில் வலதுசாரி அமைப்பினா் கடந்த 17-ஆம் தேதி போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டத்தில் ஒரு மதத்தின் புனித வாசகங்கள் எழுதப்பட்ட துணி எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், வன்முறை ஏற்பட்டது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. கல்வீச்சு தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. 3 துணை ஆணையா்கள் உள்பட காவல் துறையினா் 34 போ் காயமடைந்தனா். வன்முறையைத் தொடா்ந்து நாகபுரியில் 6 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இதில் முக்கிய குற்றவாளியான சிறுபான்மை ஜனநாயக கட்சித் தலைவா் ஃபாஹிம் கான் மீது தேச விரோத வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகபுரியின் சஞ்சய் பாக் காலனியில் உள்ள ஃபாஹிம் கானின் இரண்டு மாடி வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்தனா். அந்த வீடு உள்ளாட்சி நிா்வாகத்திடம் உரிய திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வீடு இடிக்கப்பட்டபோது அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான காவல் துறையினா் குவிக்கப்பட்டனா். ட்ரோன்கள் மூலம் அப்பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

நாகபுரி வன்முறையில் மற்றொரு குற்றவாளியான யூசுப் ஷேக்கின் வீட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையின்கீழ் அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.