கம்போடியாவில் பிரெஞ்ச் மொழிப் பேசும் நாடுகள் மாநாடு! பிரான்ஸ் அதிபர், கனடா பிரதமர் பங்கேற்பு!
பிரெஞ்ச் மொழிப் பேசும் நாடுகளின் மாநாடு கம்போடியா நாட்டில் நடைபெறுவது குறித்து...

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் - கோப்புப் படம்
கம்போடியா நாட்டில் நடைபெறும் பிரெஞ்ச் மொழிப் பேசும் நாடுகளின் மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.ஐ.எஃப். என்றழைக்கப்படும் சர்வதேச பிரெஞ்ச் அமைப்பினால் நடத்தப்படும் பிரெஞ்ச் மொழிப் பேசும் நாடுகளின் மாநாடு கம்போடியாவின் தலைநகர் புனோம் பெனில் இன்று (நவ. 14) தொடங்குகிறது. 53 உறுப்பு நாடுகள் உள்பட சுமார் 90 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று கம்போடியாவுக்கு வருகை தருகிறார். மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் திங்கள்கிழமை (நவ. 16) மேக்ரான் மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள் இணைந்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு அமைப்பின் தலைவர் மற்றும் பொதுச்செயலர் பதவிகளை யார் வகிப்பார்கள் என்பது குறித்து தீர்மானிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பதவிகளுக்கு, ருவாண்டா நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லூயீஸ் முஷிகிவாபோ மற்றும் காங்கோவின் முன்னாள் பிரதமர் பேட்ரீஸ் லுமும்பாவின் மகள் ஜூலியான அமாட்டோ லுமும்பா ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
காங்கோவின் இயற்கை வளங்களைக் கைப்பற்ற முயற்சிக்கும் எம்23 கிளர்ச்சிப்படைக்கு ருவாண்டா ஆதரவளிப்பதாக, அமெரிக்கா, காங்கோ உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனால், லூயீஸ் முஷிகிவாபோ நியமிக்கப்பட்டால் ஓ.ஐ.எஃப். அமைப்பில் இருந்து வெளியேறிவிடுவோம் என காங்கோ அரசு அறிவித்துள்ளது.
11 கோடி மக்கள் வசிக்கும் காங்கோவில் பிரெஞ்ச் மொழி அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. பிரான்ஸ் நாட்டைவிடவும் 4 கோடி மக்கள் அதிகமுள்ள காங்கோ, ஓ.ஐ.எஃப். அமைப்பில் இருந்து வெளியேறுவது அந்த அமைப்புக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இத்துடன், இந்த மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னி, ருவாண்டா அதிபர் பால் ககாமே, காங்கோ அதிபர் ஃபெலிக்ஸ் ஷிசேகேடி ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
Summary
French President Macron will participate in the summit of French-speaking countries taking place in Cambodia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


