முகப்பு
பெங்களூரு

கன்னட மண்ணில் தமிழுக்கு பல்கலைக்கழக இருக்கை கிடைக்குமா?

பெங்களூர், ஜன. 22: கன்னட மண்ணில் தமிழுக்கு பல்கலைக்கழக இருக்கை கிடைக்குமா என்று கர்நாடக தமிழர்கள் ஏங்கி வருகின்றனர். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கு தக்கவர்களாக உலகம் முழுவதும் பரந்து

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:16 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:24 PM

பெங்களூர், ஜன. 22: கன்னட மண்ணில் தமிழுக்கு பல்கலைக்கழக இருக்கை கிடைக்குமா என்று கர்நாடக தமிழர்கள் ஏங்கி வருகின்றனர்.

திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கு தக்கவர்களாக உலகம் முழுவதும் பரந்து வாழும் இனத்தவர் தமிழர்கள். இதற்கு கர்நாடகமும் விதிவிலக்கல்ல.

தென் கர்நாடகத்தின் பெங்களூர் நகரம், பெங்களூர் ஊரகம், ராமநகரம், மைசூர், கோலார், ஹாசன், மண்டியா, சாமராஜ்நகர், வட கர்நாடகத்தின் ஷிமோகா, பெல்லாரி, ஹூப்ளி போன்ற மாவட்டங்களில் 10-ம் நூற்றாண்டு முதல் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

Advertisement

அப்பன், பாட்டன், முப்பாட்டன், பூட்டன் ஆகியோர் கர்நாடகத்தில் பிறந்து வாழ்ந்திருந்தாலும், தமிழையும், அதன் பெருமையையும் என்றைக்கும் மறவாமல் இதயமுற்றத்திலும், இல்லமுற்றத்திலும் உயிர்ப்புடன் அடைகாப்பவர்கள் தமிழர்கள்.

÷பெங்களூர், கோலார் மாவட்டங்களில் தமிழர்களின் ஆதிக்கமும், தமிழின் வீச்சும் பரவலாகக் காணப்பட்டது. காலவெள்ளத்தில் இதில் வீழ்ச்சி தென்பட்டாலும், எழுச்சி குறையவில்லை என்பதற்கு தமிழர்கள் இன்னும் வீடுகளில் தமிழ் பேசுவதே சாட்சி.

இப்படிப்பட்ட தொன்மை கொண்ட கர்நாடக தமிழர்கள் அண்மைகாலமாக எதிர்கொண்டுள்ள கேள்வி, அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு சேர்ப்பது எப்படி என்பதுதான். இதற்கு ஒரே பதில் தமிழ்மொழியை ஒருமொழிப்பாடமாக கற்பிப்பதுதான்.

÷ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே இல்லாத பட்சத்தில் இது எப்படி சாத்தியமாகும். இதற்கு தீர்வாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை நிறுவ வேண்டுமென்று பெங்களூர் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் நீண்ட காலமாக கோரி வருகின்றன.

÷சில கல்லூரிகளில் தமிழ்த்துறைகள் செயல்பட்டாலும், முதுகலைப்பட்டம் படிக்க, ஆராய்ச்சி மேற்கொள்ள வழியில்லாததால் பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ப்படிக்க ஆர்வம் கொண்டவர்கள் குறைந்து வருகிறார்கள்.

தமிழர்களுக்கு குறைவில்லை என்றாலும், தமிழுக்கு இடமில்லாதபோது தமிழ் எப்படி தழைக்கும் என்று கேள்வி எழுப்புகிறார் பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ்ப் பேராசிரியர் ஒருவர்.

அவர் மேலும் கூறுகையில், சென்னை, மதுரை காமராஜர் உள்ளிட்ட தமிழக பல்கலைக்கழகங்களில் கன்னடத் துறைகள் இயங்குவதால், கர்நாடகத்தில் பெங்களூர், மைசூர் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை தொடங்க வேண்டும் என்று கேட்கவில்லை.

கன்னடம் மற்றும் தமிழ் ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளவும், முதுகலைப்பட்டம் படிக்கவும் கர்நாடக தமிழர்களுக்கு வாய்ப்பு ஏற்படும். மேலும் கர்நாடக பல்கலைக்கழகங்களில் தமிழ் போன்ற தொன்மையான மொழித்துறை இருப்பது பெருமைக்குறியதாகும்.

தமிழக அரசு நிதியுதவி செய்தால் தமிழ்த்துறை தொடங்குவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கினால் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்குவதில் தடையிருக்காது என்கிறார்.

பெங்களூர் தமிழ்ச்சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்க வேண்டுமென்பது எங்கள் நீண்டநாளைய கோரிக்கை. கர்நாடக தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்க தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக ஆட்சியில் வழிபிறக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கினால் பல நூற்றாண்டுகளாக நீண்டு கொண்டிருக்கும் தமிழர்-கன்னடர் உறவு புதிய மைல் கல்லாக அமையும். இதற்கு தமிழக அரசு மனது வைக்க வேண்டுமே என்று ஏங்குகிறார்கள் கர்நாடகத் தமிழர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.