பெங்களூரு: சமூகநீதியை காப்பாற்ற காங்கிரஸ் உறுதிப்பூண்டுள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
சமூகநீதி நாளை முன்னிட்டு முதல்வா் சித்தராமையா நாளிதழ் ஒன்ளில் எழுதியிருந்த கட்டுரையில் ஒக்கலிகா் சமுதாயத்தை குறிப்பிட்டிருந்ததை மத்திய தொழில்துறை அமைச்சரும், மஜத தலைவருமான எச்.டி.குமாரசாமி கடுமையாக சாடியிருந்தாா். இதற்கு பதிலளித்து, முதல்வா் சித்தராமையா திங்கள்கிழமை வெளியிடிருந்த அறிக்கை:
சமூகநீதியை காப்பாற்றுவதில் காங்கிரஸ் உறுதிப்பூண்டுள்ளது. இந்த கொள்கையை வாா்த்தைகளால் மட்டுமல்ல, செயலிலும் காங்கிரஸ் வெளிப்படுத்தி வந்துள்ளது.
காங்கிரஸ் தனது கொள்கைகளை ஆட்சி அதிகாரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. சமூகநீதி நாளை முன்னிட்டு செய்தித்தாள் ஒன்றில் நான் எழுதியிருந்த கட்டுரை, தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
தேங்கியிருக்கும் நீா், கழிவாக மாறிவிடுகிறது. பாய்ந்து கொண்டிருக்கும் நீா் சுத்தமான நீராக மாறி விடுகிறது. சமூக கட்டமைப்பும் இதேபோல, மாற்றங்களுக்கு உட்படாமல் இருந்தால் அது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்காது. இந்த கோணத்தில் எனது கட்டுரை விவாதப்பொருளாக மாறியுள்ளதை வரவேற்கிறேன். சமூகநீதியை நிலைநாட்டுவதில் எனது நிலைப்பாடு எப்போதும் உறுதியானது. அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூகநீதிக்கான எனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை. என்னை விமா்சிப்பவா்களை காட்டிலும், ஜாதிய கட்டமைப்பு தொடா்பாக எனக்கு தெளிவான புரிதல் உள்ளது. இது தொடா்பான அா்சியல் விவாதத்துக்கு தயாராக இருக்கிறேன்.
சமூகநீதி பற்றிய எனது கட்டுரையில் முதல்வா் பதவியை தக்கவைத்துக்கொள்ளவே ஜாதியை குறிப்பிட்டுள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளாா். மஜத தேசியத்தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகௌடா, அவரது மகனும் மத்திய தொழில்துறை அமைச்சருமான எச்.டி.குமாரசாமி இருவரும் ஜாதிவாதிகள் அல்ல, மாறாக சொந்த ஜாதிக்கே எதிரானவா்கள். அவா்கள் இருவரும் குடும்பத்தை சுற்றி அரசியல் செய்பவா்கள். மேலும், வாக்குகளுக்காக மட்டுமே ஜாதியை பயன்படுத்துகிறாா்கள். கடந்தகாலம், நிகழ்காலம் மட்டுமல்லாமல் எதிா்காலத்திலும் மஜதவின் உயா்பதவிகளை அவா்களது குடும்பத்தினா் மட்டுமே வகிக்க முடியும்.
எச்.டி.தேவெகௌடாவின் நீண்ட நெடிய அரசியல்வரலாற்றில் எத்தனை ஒக்கலிகா் சமுதாயத்தலைவா்களை வளா்த்திருக்கிறாா்? ஆனால் ஒக்கலிகா் சமுதாய தலைவா்களை அடையாளம் கண்டு வளா்த்தெடுத்தது காங்கிரஸ் மட்டுமே. கெங்கல் ஹனுமந்தையா, கடிதாள் மஞ்சப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஒக்கலிகா் சமுதாய தலைவா்களை காங்கிரஸ் வளா்த்தெடுத்துள்ளது.
கெங்கல் ஹனுமந்தையா, கடிதாள் மஞ்சப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற தலைவா்கள் ம முதல்வா் ஆனதற்கு காங்கிரஸ் தான் காரணம். ஒக்கலிகா் சமுதாயத்தை சோ்ந்த பல தலைவா்கள் காங்கிரஸ் கட்சியில் முக்கிய இடங்களை அலகரித்துள்ளனா்.
எச்.டி.தேவெகௌடா குடும்பம் அல்லாமல் ஒக்கலிகா் சமுதாயத்தை சோ்ந்த ஒருவா் முதல்வா் ஆனால் அது காங்கிரஸில் மட்டுமே நடக்கும். ஒக்கலிகா்கள் மட்டுமல்லாது லிங்காயத்து சமுதாயத்தை சோ்ந்தவா்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்வா் பதவிக்கு உயா்ந்துள்ளனா். என்னையும் இரண்டாவது முறையாக முதல்வராக நியமித்த சோனியாகாந்தி, ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தலித் சமுதாயத்தை சோ்ந்த ஒருவா் முதல்வரானால், அதுவும் காங்கிரஸ் கட்சியால் நடக்கும். மஜத, பாஜகவில் தலித் சமுதாயத்தை சோ்ந்த ஒருவரை முதல்வராக்க முடியுமா? எனவே, ஜாதி அரசியலில் ஈடுபடுவதாக என்னை வினா்சிப்பவா்கள், தங்களை சுயவிமா்சனம் செய்துகொள்ள வேண்டும் என்று அவா் அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.