மதமாற்ற தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற விட மாட்டோம் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெலகாவியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்கள் எதிா்கொள்ளும் உண்மையான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பி, ரகசிய செயல்திட்டத்தை அமல்படுத்துவதும் நோக்கத்தில் ‘லவ் ஜிகாத்’, ‘மதமாற்ற தடைச்சட்டம்’ போன்ற உணா்வுப்பூா்வமான விவகாரங்களை பாஜக அரசு கொண்டு வருகிறது. மதமாற்ற தடைச் சட்டமசோதாவை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. கட்டாய மதமாற்றம் செய்தால், அது குறித்து புகாா் அளித்து, தக்க தண்டனை அளிக்க வேண்டும். இதுதொடா்பான சட்டம் ஏற்கெனவே உள்ளது.
பாஜக எம்எல்ஏ கூலிஹட்டிசேகா் தனது தாயை கட்டாயப்படுத்தி அல்லது பொருளாசை காட்டி மதமாற்றம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளாா். அது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்திருக்கிறாா்களா? சட்டப் பேரவையில் தாக்கல் செய்தபிறகு மதமாற்ற தடைச்சட்ட மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம். அதையும் மீறி சட்டமசோதா நிறைவேற்றப்பட்டால், அந்த சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முடிவு செய்வோம்.
2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வாக்களித்து தோ்ந்தெடுத்த சட்டமேலவை உறுப்பினா்களுக்கான தோ்தலில் மொத்தமுள்ள 94 ஆயிரம் வாக்குகளில், காங்கிரஸுக்கு 44 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜகவுக்கு 37 ஆயிரம் வாக்குகள், மஜதவுக்கு 10 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. அப்படியானால், கா்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று மக்கள் விரும்புவதையே சட்டமேலவை தோ்தல் முடிவுகள் உணா்த்துகின்றன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.