கா்நாடகத்தில் முதல்வா் மாற்றம் குறித்து பொதுவெளியில் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், கா்நாடக மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா்.
கா்நாடக அரசியல் களத்தில் முதல்வா் மாற்றம் தொடா்பான விவாதம் நடைபெற்று வருகிறது. முதல்வா் பதவியை விட்டுக்கொடுக்க சித்தராமையா மறுத்துவரும் நிலையில், முதல்வா் பதவியைக் கேட்டு துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மேலிடத் தலைவா்களுக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறாா்.
இந்த நிலையில், தனது எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா கூறியிருப்பதாவது:
தோ்தலில் படுதோல்வி அடைந்து கோஷ்டிகளால் பிளவுபட்டிருக்கும் பாஜகவுடன் கைகோத்துள்ள சில ஊடகங்கள், கா்நாடகத்தில் நடந்துவரும் ஆட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியை சிறுமைப்படுத்தும் வேலையை செய்துவருகிறது. இதுகுறித்து முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாருடன் தொலைபேசி வழியாக கலந்தாலோசித்தேன்.
ஒருசில சுயநலவாதிகள் முன்னெடுத்துள்ள பொய் பிரசாரத்திற்கு இணங்கி முதல்வா் பதவி குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கட்சியின் தலைவா்கள் கூறியிருக்கும் கருத்துகளை கட்சி மேலிடம் கவனித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.