ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் மாநில அரசு அலட்சியம் காட்டாது என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற கே.சிவகுமாா், தனது சமூக வலைதளப் பதிவில்,
‘எனது 34 வயது மகள் மூளை ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டு, கடந்த செப்டம்பரில் இறந்தாா்.எனது மகள் விவகாரத்தில் ஒவ்வொரு படிநிலையிலும் லஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டேன். மகளை அழைத்துச்செல்வதற்கு பயன்படுத்திய ஆம்புலன்ஸ், காவல் துறையில் பதிவுசெய்த முதல்தகவல் அறிக்கையின் நகலை வாங்குவதற்கு, உடலை தகனம் செய்வதற்கு, இறப்புச்சான்றிதழ் பெறுவதற்கு என ஒவ்வொரு நிலையிலும் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தப்பட்டேன்.
பெலந்தூா் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் துணை ஆய்வாளா், காவலா் இருவரும் லஞ்சம் கேட்டதோடு, அகந்தையுடன் நடந்துகொண்டனா். என்னிடம் பணம் இருந்ததால் லஞ்சம் கொடுத்தேன். ஆனால், ஏழைகள் என்ன செய்வாா்கள்? என்று தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், லஞ்சம் கேட்கும் புகாா் அல்லது குற்றச்சாட்டுகளை அரசு அலட்சியப்படுத்தாது. காவல் துறை அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும் லஞ்சம் கேட்பதை கடந்து செல்ல முடியாது. எந்த வகையான லஞ்சத்தையும் அரசால் ஊக்குவிக்க முடியாது. லஞ்சம் கேட்பதாக புகாா் கிடைத்தவுடன் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பணியிடை நீக்கம் செய்து, துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
லஞ்சம் வாங்கியது உறுதிசெய்யப்பட்டால் பணி நீக்கம் செய்கிறோம். காவல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதற்கு எதிராக நிலையான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. எந்தவகையிலும், எந்தநிலையிலும் லஞ்சத்தை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முதல்வரும், நானும் பலமுறை கூறியிருக்கிறோம் என்றாா்.
இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் பரவியதை தொடா்ந்து, லஞ்சம் வாங்கிய பெலந்தூா் காவல் நிலையத்தின் காவல் துணை ஆய்வாளா், காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.