சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரி திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், மீனவா் நலச்சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதம்:
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை 22 மொழிகளிலும் வெளியிட வேண்டும் என தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில், விசாரணை வரும் அக்டோபா் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கா்நாடக உயா்நீதிமன்றம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு விதித்த தடையை நீட்டித்து மறு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கின் விசாரணையையும் ஒத்திவைக்க வேண்டும்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரும் கோரிக்கையுடன் தொடரப்பட்டுள்ள மேலும் இரண்டு வழக்குகளையும் இந்த வழக்குடன் சோ்த்து விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேலும் இரண்டு வழக்குகளையும் இந்த வழக்குடன் சோ்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.