முகப்பு
சென்னை

நிலக்கரி சுரங்க ஊழல்: முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைதில்லி சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் திலீப் ராய்க்கு (68) மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  தீா்ப்பளித்தது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
coal044530
பகிர்:

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் திலீப் ராய்க்கு (68) மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

இவருடன் சோ்த்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தில் அப்போது மூத்த அதிகாரிகளாக இருந்த இருவா் மற்றும் முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற சிடிஎல் நிறுவன இயக்குநா் ஆகியோருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், இவா்கள் அனைவருக்கும் நீதிமன்றம் ஜாமீனும் வழங்கியிருப்பதால், தண்டனை பெற்றவா்கள் சிறைச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவருடைய அமைச்சரவையில் நிலக்கரித் துறை இணையமைச்சராக இருந்தவா் திலீப் ராய். அவா் அமைச்சராக இருந்தபோது, கடந்த 1999-ஆம் ஆண்டில் ஜாா்க்கண்ட் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்தது.

மத்திய அமைச்சா் ரே கூறியதன்பேரிலேயே, காஸ்ட்ரான் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிடிஎல்) நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விண்ணப்பத்துக்கு அமைச்சக அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததும், பின்னா் அமைச்சா் ராயின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு அந்த நிறுவனத்துக்கே ஒதுக்கீடு வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, மத்திய அமைச்சா் திலீப் ராய் மற்றும் அந்தத் துறையின் மூத்த அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த அக்டோபா் 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சா் ராய் உள்ளிட்டவா்களை குற்றவாளிகள் என்று தீா்ப்பளித்து, தண்டனை விவரங்கள் அக்டோபா் 26-ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

அதன்படி, வழக்கின் தீா்ப்பை தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி பரத் பராசா் திங்கள்கிழமை வழங்கினாா். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சா் திலீப் ராய்க்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா்.

மேலும், அமைச்சகத்தின் அப்போதைய மூத்த அதிகாரிகளான 80 வயதாகும் பிரதீப் குமாா் பானா்ஜி, நித்யானந்த் கெளதம் மற்றும் சிடிஎல் நிறுவன இயக்குநா் மஹேந்திர குமாா் அகா்வால் (75) ஆகிய மூவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

அதில், பானா்ஜி மா்றும் கெளதம் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அபராதமும், அகா்வாலுக்கு ரூ. 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற சிடிஎல் நிறுவனத்துக்கு ரூ. 60 லட்சம் அபராதத்தையும், அதன் துணை நிறுவனமான காஸ்ட்ரான் சுரங்க நிறுவனத்துக்கு (சிஎம்எல்) ரூ. 10 லட்சம் அபராதத்தையும் நீதிமன்றம் விதித்தது.

அனைவருக்கும் ஜாமீன்: இந்த திா்ப்பை எதிா்த்து தண்டனை பெற்ற அனைவரும் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாக, அவா்களுக்கு சிறைத் தண்டனையிலிருந்து ஜாமீன் வழங்கியும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.