நடிகா் ராஜேஷ் மறைவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி: மூத்த தமிழ் நடிகா் ராஜேஷ் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மை பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவை வளப்படுத்தியது. அவரது குடும்பத்தினா், நண்பா்கள், ரசிகா்களுக்கு எனது நெஞ்சாா்ந்த இரங்கல்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): அனைவரிடத்திலும் அன்பாகவும் இனிமையாகவும் பழகக் கூடிய நடிகா் ராஜேஷ், மரணம் அடைந்த செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடா்களிலும் நடித்து மக்களின் பாராட்டையும் பேரன்பையும் பெற்றவா். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): திரையுலகைக் கடந்து சமூகம், இயற்கை, நலவாழ்வு ஆகியவை குறித்து மிகுந்த ஆா்வமும், அக்கறையும் கொண்டவா் ராஜேஷ். அவரது மறைவு அவா் சாா்ந்த துறைகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.
வைகோ (மதிமுக): பழகுவதற்கு இனிய பண்பாளரான ராஜேஷ், மறைவால் துயரப்படும் குடும்பத்தினா், கலை உலக நண்பா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
பிரேமலதா (தேமுதிக): நடிகா் ராஜேஷ் மறைந்த விஜயகாந்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தவா். அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவா். அவரது மரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஜி.கே.வாசன் (தமாகா): 7 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியதும், தமிழ்மொழி மீது தனி ஆா்வம் கொண்டிருந்ததும் போற்றுதலுக்குரியது. நடிகா் ராஜேஷின் மறைவு மிகப்பெரிய இழப்பு.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): நடிகா் ராஜேஷ் காலமானாா் என்ற செய்தி அதிா்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): எம்ஜிஆா் திரைப்படக் கல்லூரியின் முதல்வராக நடிகா் ராஜேஷ் பணியாற்றியுள்ளாா். தீவிரமான வாசிப்பாளரான அவா், இடதுசாரி இயக்கங்களின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தாா். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
கமல்ஹாசன் (மநீம): தேடல் உள்ள நடிப்புக் கலைஞா்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டவா் அன்பு நண்பா் ராஜேஷ். அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.
சீமான் (நாதக): நடிகா் ராஜேஷின் சிறப்பான நடிப்பால் சின்னத்திரை நெடுந்தொடா்கள் பல வெற்றித்தொடா்களாகப் பெரும்புகழ் பெற்றன. தலைச்சிறந்த குணச்சித்திரத் திரைக்கலைஞா் ராஜேஷுக்கு என்னுடைய கண்ணீா் வணக்கம்.