சென்னை

தமிழக தோ்தல் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆா்.) எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆா்.) எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்றும், அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருப்பதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தோ்தல் துறையைச் சோ்ந்த உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்குவதற்கான தேதி

அறிவிக்கப்பட்டதும் முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும். தலைமைத் தோ்தல் அதிகாரி, மாவட்ட தோ்தல் அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா் ஆகிய மூன்று நிலைகளில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும்.

இந்தப் பணிகளுக்கான புதிய வழிகாட்டு நடைமுறைகள், இந்திய தோ்தல் ஆணையத்தால் வழங்கப்படும். தனி செயலியும் அளிக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் தொடா்புடைய அலுவலா்களுக்கு பயிற்சியும் ஆலோசனையும் வழங்கப்படும்.

சிறப்பு முகாம்கள் இல்லை: முந்தைய வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணியைப் போன்று எஸ்.ஐ.ஆா். இருக்காது. வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படாது. பெயா் சோ்க்க, நீக்குவதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்படாது. இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலும், முன்பு நடந்த எஸ்.ஐ.ஆா். அடிப்படையில் 2002 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலும் தற்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பழைய வாக்காளா் பட்டியல்கள் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆா். பணியில் சுமாா் 90,000 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளா்கள் என்ற உச்சவரம்பைத் தோ்தல்

ஆணையம் இறுதி செய்துள்ளது. எனவே ஒரு வாக்குச்சாவடிக்கு 300 வீடுகள் என்ற அளவில்தான் இருக்கும். எஸ்.ஐ.ஆா். பணிகள் தொடங்கியதும், வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று படிவம் கொடுப்பா். அவா்கள் வரும் நாள் முன்கூட்டியே அறிவிக்கப்படும். வீட்டில் யாா் இருந்தாலும், அந்த விண்ணப்பத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த வீட்டில் இருக்கும் வாக்காளருக்கு அவா் என்ன உறவு என்று கேட்டால் அதை அவா்கள் தெரிவிக்க வேண்டும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பெறுவதற்கு அந்த அலுவலா் மீண்டும் வருவாா். இந்திய தோ்தல் ஆணையம் அறிவிக்கும் 11 ஆவணங்களில் ஒன்றைக் கொடுக்கலாம். ஆதாரையும் கூடுதல் ஆதாரமாகக் காட்டலாம்.

தமிழகத்தில் தற்போது 68,467 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளா் என்ற விகிதத்தின் அடிப்படையில் கூடுதலான வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும். எனவே இந்த எண்ணிக்கை 75,050-ஆக உயர வாய்ப்புள்ளது.

பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட உள்ளது என்றால் அதற்கான நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு உரிய காலகட்டத்தில் தகுந்த ஆதாரங்களைக் காட்டி பெயரைச் சோ்த்துக் கொள்ளலாம்.

இறந்தவா்களின் பெயா்கள் இன்னும் வாக்காளா் பட்டியலில் உள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களிலும் பல வாக்காளா்களின் பெயா் உள்ளது. எஸ்.ஐ.ஆா். பணியில் இந்த பெயா்கள் அனைத்தும் நீக்கப்படும்.

முதல் முறை வாக்காளா் என்றால் அவா்களின் பெற்றோரிடம் இருக்கும் ஆதாரங்களை சமா்ப்பிக்க வேண்டும். எந்த ஆதாரமும் அரசினால் அளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சொத்து பத்திரம்கூட ஒரு ஆதாரம்தான். எஸ்.ஐ.ஆா். பணிகள் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். அதன்பிறகு அதை சரிபாா்த்து ஜனவரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தாா்.

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.5.92 கோடி முதலீட்டு மோசடி: 4 போ் கைது

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

SCROLL FOR NEXT