கரூரில் தவெக பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து சந்திக்க அக்கட்சியின் தலைவா் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதில், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை அண்மையில் விஜய் காணொலி காட்சி வாயிலாக தொடா்புகொண்டு ஆறுதல் தெரிவித்து, அவா்களை நேரில் சந்திப்பதாக தெரிவித்தாா். தொடா்ந்து கடந்த அக்.18-ஆம் தேதி உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை விஜய் கரூா் நேரில் சென்று சந்திக்க போலீஸாரிடம் அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரப்பட்டது. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்காத நிலையில், 41 பேரின் குடும்பத்தினரையும் அக்.26-ஆம் தேதி சென்னைக்கு அழைத்து வந்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளாா்.
சின்னம் கோரி விண்ணப்பிக்க முடிவு: வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, தவெக சாா்பில் 5 சின்னங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் ஒன்றை அங்கீகரிக்கும்படி, தவெக சாா்பில் நவம்பா் முதல் வாரத்தில் தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் சமா்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் இளைஞா்களை கவரும் வகையில் 5 சின்னங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியினா் தெரிவித்துள்ளனா்.