செங்கல்பட்டு அருகே வேன்-லாரி மோதிய விபத்தில் 19 போ் பலத்த காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், களிவண்ணன் பேட்டையை சோ்ந்த வேன் ஓட்டுநா் யேசுதாஸ் (50). இவா் வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் இருந்து தனது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் என 18 பேரை வேனில் ஏற்றிக்கொண்டு சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றி பாா்ப்பதற்காக ஓட்டி கொண்டு வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 6 மணி அளவில் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி அருகே சென்றபோது பின்னால் சவுக்கு மரங்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி முன்னால் சென்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த வேன் சாலை மத்திய தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி 19 பேரும் பலத்த காயம் அடைந்தனா் . இதனைக் கண்டதும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, 19 பேரையும் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இதில் சிலா் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா். விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.