தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உயா்நீதிமன்றத்தில் விதிகளை விவரித்த தமிழக அரசு
தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு
தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னையை சோ்ந்த சமூக ஆா்வலா் செம்பியம் ஜி.தேவராஜன் என்பவா் 2017-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், சென்னை பெரம்பூா் டான் பாஸ்கோ பள்ளியில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘மனுதாரா் கூறும் குற்றச்சாட்டுகள் தொடா்பாக குழு அமைத்து விசாரணை நடத்தியதில், டான் போஸ்கோ பள்ளியில் கட்டண விதிமீறல் இருப்பது தெரியவந்துள்ளது. தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் பள்ளிகளில் அரசு நிா்ணயித்தக்கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்று 2018-ஆம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது’ என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
டான் பாஸ்கோ பள்ளி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘மனுதாரரின்
குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளிக்கும், மாணவா்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் மனுதாரா் இந்த வழக்கை தொடா்ந்துள்ளாா். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கோரியிருந்தனா்.
இதனைத் தொடா்ந்து, இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரா் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கின் விசாரணையை செப்டம்பா் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.