சென்னை: 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிலையை தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இன்று பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனர்.
தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மேலதிருவிழாவில் ஒரு காரை வழிமறித்து சோதனை செய்ததில் இரண்டரை அடி உயரம் உள்ள விஷ்ணு சிலையை காவல் துறையினர் மீட்டனர்.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினேஷ், தனது தந்தை நிலத்தைத் தோண்டும் போது இந்த சிலையைக் கண்டதாக தெரிவித்துள்ளார். அதே வேளையில், தனது தந்தை சிலையை கால்நடை கொட்டகையில் மறைத்து வைத்திருந்ததாக தினேஷ் காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தினேஷ் சிலையை விற்க முடிவு செய்ததாகவும், அவரும் மற்ற ஆறு கூட்டாளிகளும் சிலையை ரூ.2 கோடிக்கு விற்க முடிவு செய்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணையில் தினேஷிடம் சிலை இருப்பதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்ததுள்ளது.
தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த காவல் துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இந்த சிலை 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் ஏதாவது ஒரு கோயிலிலிருந்து இந்த சிலை திருடப்பட்டிருக்கலாம் என்றும், சிலை திருடப்பட்ட கோயிலின் விவரங்களையும் நாங்கள் தொடர்ந்து சேகரித்து வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.