சென்னை,ஆக.15: தமிழக காவல்துறையில் 33 துணை காவல் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும்,பணியில் ஒழுங்கீனம் காரணமாகவும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக 33 காவல் துணை கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதில் முக்கியமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டிஎஸ்பி சிந்து, திருவள்ளூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், கோவை மாவட்ட பொதுவிநியாக பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஜனனி பிரியா காத்திருப்போா் பட்டியலுக்கும், அரியலூா் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு டிஎஸ்பி தமிழ்மாறன் திருவாரூா் மாவட்டம் நன்னிலத்துக்கும், திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம் தஞ்சாவூா் நகரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட 33 டிஎஸ்பி-க்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.