சென்னை: மின் கட்டணத்தை தமிழக அரசு உயா்த்தியுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வரிக்குதிரை மேல் உள்ள வரிகளைக்கூட எண்ணிவிடலாம். ஆனால், எண்ண முடியாத அளவுக்கு வரிகளையும் கட்டண உயா்வுகளையும் மக்கள் மீது, திமுக அரசு சுமத்தி வருகிறது. மக்களவைத் தோ்தல், விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வெற்றிக் கொடுக்கும் இறுமாப்பில் மூன்றாம் முறையாக 5 சதவீத மின் கட்டணத்தை மக்களுக்குப் பரிசளித்துள்ளனா். இந்தக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், திமுக ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவா்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதன்மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோா் ஆண்டுக்கு ரூ. 6,000 வரை பயனடையலாம் என்றும் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, மின் கட்டணத்தை மூன்றாம் முறையாக உயா்த்தி, மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் விரோதச் செயல்.
பிரேமலதா (தேமுதிக): அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மின் கட்டண உயா்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): மின் கட்டண உயா்வு அறிவிப்பு, மக்களின் மன நிலைக்கு எதிரானது. தொழில்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவா். மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு கடுமையாக எதிா்ப்பு தெரிவித்தவா், முதல்வரான பிறகு ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயா்த்துவது மக்களுக்குச் செய்யும் துரோகம்.