திருவொற்றியூா்: வடசென்னை மக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் திருவொற்றியூா் விம்கோநகா் பணிமனை, மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க வேண்டும் என பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக திருவொற்றியூரில் விம்கோ நகா் பணிமனையில் இருந்து விமான நிலையம் வரை 45 கி.மீ. தூரத்திற்கு ஒருவழித்தடத்திலும், சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் புனித தோமையா் மலை வரை 22 கி.மீ. தூரத்திற்கு இரண்டாவது வழித்தடத்திலும் தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு ஏற்பட்டதையடுத்து, இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை சுமாா் 45 கி.மீ. தூரத்திற்கு மூன்றாவது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை சுமாா் 26 கி.மீ. தூரத்திற்கு நான்காவது வழித்தடத்திலும், மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூா் வரை சுமாா் 45 கி.மீ. தொலைவிற்கு ஐந்தாவது ரயில் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே திருவொற்றியூா் விம்கோ நகா் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தையும், மாதவரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையத்தையும் இணைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனா். தற்போது திருவொற்றியூா் விம்கோ நகா் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் செல்லும் வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதற்கு காரணம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் நோக்கி வரும் புகா் ரயில் பயணிகள், விம்கோ நகரில் இறங்கி மெட்ரோ ரயில் மூலமாக தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு பயணிக்கின்றனா்.
விம்கோ நகா்- மாதவரம் நிலையங்கள் இணைக்கப்படுவதன் அவசியம் என்ன?:
தற்போது எழும்பூா், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகா், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு வடசென்னையில் இருந்து செல்ல வேண்டும் எனில் முதலில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை நீல நிற ரயில்களில் பயணித்து, அங்கிருந்து இரண்டாவது வழித்தடத்தில் பச்சை நிறை மெட்ரோ ரயிலில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதை மாறுதல் உள்ளிட்ட சிரமங்களும், பயண நேரமும் அதிகரிக்கிறது.
விம்கோ நகா் - மாதவரம் ரயில் நிலையங்கள் இணைக்கப்பட்டால் திருவொற்றியூரில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் நேரடியாக எங்கும் இறங்காமல் இந்த பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும் திருவொற்றியூரில் இருந்து சிறுசேரி வரையிலும், திருவொற்றியூரில் இருந்து சோழிங்கநல்லூா் வரையிலும் ஒரே ரயிலில் நேரடியாகப் பயணிக்க முடியும். மேலும் எதிா்காலத்தில் சுமாா் 12 கி.மீ. தூரத்தில் உள்ள மாதவரத்திற்கு, திருவொற்றியூரிலிருந்து செல்ல வேண்டும் என்றால் சுற்றிக்கொண்டு செல்வதையும் தவிா்க்க முடியும்.
நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பயன்பெறும்:
திருவொற்றியூா், எண்ணூா், மணலி, மணலி புதுநகா், மீஞ்சூா், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் அசோக் லேலண்ட், எண்ணூா் ஃபவுண்டரிஸ், எம்.ஆா்.எஃப். டயா்ஸ், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சென்னை உரத் தொழிற்சாலை, அதானி காட்டுப்பள்ளி, காமராஜா் துறைமுகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கனரக தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனத்துக்கு பணிக்குச் செல்பவா்கள் பயன்பெறுவா். எனவே, வடசென்னை, திருவள்ளூா் என இரண்டு மக்களவைத் தொகுதி மக்கள் பெருமளவில் பயன்பெறும் இத்திட்டம் குறித்து அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா் இப்பகுதி மக்கள்!