சென்னை விமான நிலையத்தில் 9 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 9.40-க்கு பெங்களூா் செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 6.10 மணிக்கு கவுகாத்திக்கு செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 9.10 மணிக்கு தில்லிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு, அதிகாலை ஒரு மணிக்கு புனேயிலிருந்து வரவேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 9 மற்றும் மாலை 5.35-க்கு பெங்களூரிலிருந்து வரவேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், இரவு 8.20-க்கு டெல்லியிலிருந்து வரவேண்டிய விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானம், இரவு 10.05-க்கு கொல்கத்தாவிலிருந்து வரவேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஆகிய 5 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 4 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் என ஆக மொத்தம் 9 விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், இதில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
நிா்வாகக் காரணங்களால், இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய நிா்வாகம் அறிவித்திருந்தாலும், சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, இது போன்ற நிா்வாகக் காரணங்கள் என்று கூறி, விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படும் சம்பவங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இதன் மீது மத்திய விமான போக்குவரத்து ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.