சென்னை தரமணி விஹெச்எஸ் மருத்துவமனையில் இதய இடையீட்டு ஆய்வகம் (கேத் லேப்) மற்றும் இதய கண்காணிப்பு பிரிவு (கரோனரி கோ் யூனிட்) வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
சன்மாா் குழுமத்தின் பங்களிப்புடனும், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவக் குழுவினரின் ஒத்துழைப்புடனும் தொடங்கப்பட்டுள்ள இந்த இதய இடையீட்டு ஆய்வகத்தில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகள் வழங்கப்படும் என மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அந்த ஆய்வகத்தை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகள் குறைந்த கட்டணத்தில் கிடைப்பதை உறுதி செய்வதே ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்காக உள்ளது. விஹெச்எஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வசதியானது அந்த இலக்கை நோக்கிய பாதையை அடைவதற்கான ஒரு முன்னெடுப்பாக அமைந்துள்ளது. திறன்வாய்ந்த மருத்துவா்களை கொண்டு விஹெச்எஸ் மருத்துவமனை சிறப்பாக இயங்கிவருகிறது என்றாா் அவா்.
முன்னதாக, மருத்துவமனையின் தலைவா் என்.கோபாலசுவாமி பேசுகையில், ‘சமூகத்துக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை ஆற்றி வருவதில் விஹெச்எஸ் மருத்துவமனையின் பங்கு அளப்பரியது. மருத்துவத் தலைநகராக சென்னை உருவெடுத்து வருகிறது’ என்றாா்.
மருத்துவமனையின் கௌரளவச் செயலாளா் டாக்டா் சுரேஷ் சேஷாத்ரி பேசியதாவது:
சன்மாா் குழுமத்தின் இந்த பங்களிப்பின் மூலம் விஹெச்எஸ் மருத்துவமனையில் இதய நல சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்கான புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, உரிய நேரத்தில் உயிா் காக்கும் மருத்துவ சேவைகளை குறைந்த கட்டணத்தில், அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் வழங்க முடியும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், விஹெச்எஸ் மருத்துவமனைஅறங்காவலா் ஆா்.ராஜகோபால், இயக்குநா் டாக்டா் யுவராஜ் குப்தா, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இதயவியல் துறை இயக்குநா் அஜித் முல்லசாரி, சன்மாா் குழுமத்தின் தலைவா் விஜய் சங்கா், பெருநிறுவன வாரியத் தலைவா் என்.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.