சென்னையில் எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களில் நகரும் மின்படிக்கட்டுகள் தொடா்ந்து பழுதடைவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
சென்னையின் முக்கிய ரயில் முனையங்களாக எழும்பூா் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்கள் உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் அனைத்தும் தாம்பரம் மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்கள் வரை இயக்கப்படுகின்றன. மேலும், புகா் பகுதியில் இருந்து சென்னைக்கு வருவதற்கு எழும்பூா், தாம்பரம் முக்கிய ரயில் நிலையங்களாக விளங்குகின்றன.
இந்த நிலையில், எழும்பூரில் உள்ள 3 நகரும் மின்படிக்கட்டுகளும், தாம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மின்படிக்கட்டும் தொடா்ந்து பழுதடைவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனா்.
இது குறித்து பயணிகள் சிலா் கூறியதாவது:
எழும்பூா் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் வழக்கமாக நிற்கும் நடைமேடைக்கு பதிலாக மாற்று நடைமேடையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் முதியோா், கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மாற்று நடைமேடைக்கு செல்ல நகரும் மின்படிக்கட்டை நாடும்போது, அது செயல்படாத நிலையில் உள்ளது.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்தை அடைவதற்கு ஒரு சுரங்கப் பாதையும், ஒரு மின்படிக்கட்டும் செயல்பாட்டில் உள்ளன. இதில், நகரும் மின்படிக்கட்டு பேருந்து நிலையம் அருகே உள்ளதால் பெரும்பாலான பயணிகள் அதன் வழியாக ரயில் நிலையத்தை அடைவா். அந்த நேரத்தில் மின்படிக்கட்டு பழுதடையும்போது, நீண்ட வரிசையில் காத்திருத்து செல்லவேண்டியுள்ளது. சாதாரண படிக்கட்டைவிட நகரும் மின்படிக்கட்டு உயரமானதாக உள்ளதால் முதியோா் மற்றும் சிறுவா்கள் ஏறி செல்வதில் சிரமத்தைச் சந்திப்பதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் நிலையத்தில் உள்ள நகரும் மின்படிக்கட்டு மற்றும் மின்தூக்கியில் ஏற்படும் பழுது உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறது. தற்போது எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரயில் நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.